இப்பத்தான் ஓய்வை அறிவித்தார் – அதுக்குள்ள பயிற்சியாளராக வரும் தமிழன் – டிராபி ஜெயிக்க ஆர்சிபி பக்கா பிளான்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் மற்றும் ஆலோசகராக அந்த அணியின் ஓய்வு பெற்ற வீரரான தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1985 ஆம் ஆண்டு ஜூன் 01ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் தினேஷ் கார்த்திக். ஆரம்பத்தில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு ரூ.7.40 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு 4 ஆண்டுகள் கேகேஆர் அணிக்காக விளையாடினார்.
இதையடுத்து, 2022 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 3 சீசன்களாக விளையாடி வந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையில் 257 போட்டிகளில் விளையாடி 22 அரைசதங்கள் உள்பட 4842 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 97* ரன்கள் அடங்கும். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 17ஆவது சீசன் ஆரம்பத்திலேயே இது தான் தனது கடைசி ஐபிஎல் சீசன் என்று அறிவித்தார்.
இந்த சீசனை தோல்வியோடு தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, அதன் பிறகு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடம் பிடித்திருந்தது. மேலும், அடுத்தடுத்து தோல்வியின் காரணமாக ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசியாக விளையாடிய 6 போட்டியிலும் வெற்றி பெற்று சரியான கம்பேக் கொடுத்தது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி நெட் ரன்ரேட் அடிப்படையில் 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. பிளே ஆஃப் சுற்று போட்டியில் எலிமினேட்டரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில், முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்த ஆர்சிபி பரிதாபமாக 3ஆவது முறையாக எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது. கடைசியில் இந்தப் போட்டியில் தோற்கவே கண்ணீர்மல்க தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றார். மேலும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் விளையாடிய 15 போட்டிகளில் 13 இன்னிங்ஸ் விளையாடி 326 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 2 முறை அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படி சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்த தினேஷ் கார்த்திக்கை ஆர்சிபி விடுவதாக இல்லை.
ஓய்வு பெற்ற கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்குள்ளாக அவரை பேட்டிங் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆர்சிபி கூறியிருப்பதாவது: எல்லா வகையிலும் எங்களது கீப்பரை வரவேற்கிறோம். புதிய அவதாரத்தில் ஆர்சிபிக்கு திரும்பியுள்ளார். பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக அணியில் இடம் பெற்றுள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து மனிதனை பிரிக்கலாம். ஆனால், மனிதனிடமிருந்து கிரிக்கெட்டை பிரிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளது. இது குறித்து வீடியோ வெளியிட்டு தினேஷ் கார்த்திக் கூறியிருப்பதாவது: நமஸ்காரம் பெங்களூரு. கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு உதவியாக இருந்ததற்கும், ஆதரவு அளித்ததற்கும் உங்கள் எல்லோருக்கும் நன்றி.
அழகான ஃபேன்பேஸ் கொண்டது ஆர்சிபி. இதுவரையில் ஆசிபியின் வீரராக இருந்த நான் இனிமேல் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் இருக்கப்போகிறேன். ஒரு வீரராக ஆர்சிபிக்கு டைட்டில் வரை அழைத்துச் சென்றேன். ஆனால், ஒரு பயிற்சியாளராக கண்டிப்பாக என்னால் டிராபி வென்று கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் வயதான அதிக அனுபவம் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியாளராக இருந்த நிலையில் 39 வயதில் ஒரு பயிற்சியாளரான தினேஷ் கார்த்திக்கிற்கு அந்த அணியில் உள்ள வீரர்கள் எப்படி வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் பார்க்கலாம்.