சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது ஆர்சிபி அணி. 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடேவில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷான்க் சிங், ஜெகதீஷா சுஜித், கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், ஃபரூக்கி, உம்ரான் மாலிக்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி, டுப்ளெசிஸ் (கேப்டன்), ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல் முகமது சிராஜ், ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரரும் நட்சத்திர வீரருமான விராட் கோலி இந்த சீசனில் 3வது முறையாக முதல் பந்தில் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு டுப்ளெசிஸூம் ரஜத் பட்டிதாரும் இணைந்து 105 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய பட்டிதார் 38 பந்தில் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். க்ளென் மேக்ஸ்வெல் 24 பந்தில் 33 ரன்கள் அடித்தார். ஒருமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார் ஃபாஃப் டுப்ளெசிஸ். 19வது ஓவரில் களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக் 8 பந்தில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 30 ரன்களை குவித்து மீண்டுமொரு முறை ஆர்சிபிக்காக முடித்து கொடுத்தார். கடைசி ஓவரின் கடைசி 4 பந்தில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார் தினேஷ் கார்த்திக். அவரது அதிரடியால் 20 ஓவரில் 192 ரன்களை குவித்தது ஆர்சிபி அணி.

193 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணியில் திரிபாதி மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடினார். திரிபாதி 37 பந்தில் 58 ரன்கள் அடித்தார் திரிபாதி. அவரைத்தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியதால் 19.2 ஓவரில் வெறும் 125 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் அணி ஆல் அவுட்டானது.

ஆர்சிபி அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய வனிந்து ஹசரங்கா, மார்க்ரம் (21), பூரன் (19), ஜெகதீஷா சுஜித் (2), ஷஷாந்த் சிங் (8) மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய 5 வீரர்களை வீழ்த்தினார். ஹசரங்காவின் சுழலில் மண்டியிட்டு சரணடைந்தது சன்ரைசர்ஸ் அணி. இந்த சீசனில் இது ஆர்சிபி அணியின் 6வது வெற்றி. 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஆர்சிபி அணி 4ம் இடத்தில் உள்ளது.