இந்திய அணி தேர்வில் முக்கியமான மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
2017ம் ஆண்டிலிருந்து 2021 டி20 உலக கோப்பை வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார் ரவி சாஸ்திரி. அவரது பயிற்சிக்காலத்தில் இந்திய அணி நிறைய சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றிருந்தாலும், ஒரு ஐசிசி டிராபியை கூட வென்றதில்லை என்பது மைனஸாக உள்ளது. மேலும், அவரது பயிற்சிக்காலத்தில் அணி தேர்வுகள் சில பெரும் சர்ச்சைக்குள்ளாகின.
குறிப்பாக 2019 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு கடும் விமர்சனத்துக்குள்ளானது. அணி தேர்வில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோலியின் தலையீடு என்று கருதப்பட்ட நிலையில், பயிற்சியாளர் பதவிக்காலம் முடிந்த பின்னர் சாஸ்திரி அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது.
2019 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வில் தான் தலையிடவே இல்லை என்று கூறிய ரவி சாஸ்திரி, அந்த அணியில் தோனி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய 3 விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் சாஸ்திரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய அணி தேர்வு குறித்து இப்போது பேசியுள்ள ரவி சாஸ்திரி, அணி தேர்வில் பயிற்சியாளரும் கேப்டனும் அவர்களது கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும். குறிப்பாக, பயிற்சியாளர் போதுமான அனுபவம் வாய்ந்தவராக இருக்கும்பட்சத்தில், அவரது கருத்தை கேட்டே தீர வேண்டும். நான் அனுபவம் வாய்ந்தவன், இப்போது ராகுலும் (டிராவிட்) அனுபவம் வாய்ந்தவர். எனவே பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் கருத்தை கேட்க வேண்டும் என்று சாஸ்திரி கூறியுள்ளார்.
