Asianet News TamilAsianet News Tamil

Ravi Shastri: 2019 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவங்க 2 பேரில் ஒருவரை எடுத்துருக்கணும் - ரவி சாஸ்திரி

2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான இந்திய அணியில் அம்பாதி ராயுடு அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவரை எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
 

Ravi Shastri opines either Ambati Rayudu or Shreyas Iyer should have been in India squad for 2019 world cup
Author
Chennai, First Published Dec 10, 2021, 7:42 PM IST

அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி, அண்மையில் நடந்துமுடிந்த டி20 உலக கோப்பை வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் இந்திய அணி, வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர்களை வென்றதுடன், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் வெற்றிகளை குவித்தது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக திகழ்ந்தது.

ஆனால் சாஸ்திரியின் பதவிக்காலத்தில் இந்திய அணி ஒரு ஐசிசி டிராபி கூட வென்றதில்லை என்பது குறையாக அமைந்தது. அதுமட்டுமல்லாது அவர் பயிற்சியாளராக இருந்த சமயத்தில் இந்திய அணி தேர்வு மிகக்கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தபோது, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமை தேர்வாளராக இருந்தபோது செய்யப்பட்ட அணி தேர்வுகள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டதுடன், சில தேர்வுகள், சில புறக்கணிப்புகள் விசித்திரமாகவும் புரியாத புதிராகவும் இருந்தன. அவை இந்திய அணிக்கு பாதிப்பாகவும் அமைந்தன.

அந்தவகையில், அப்படியான சர்ச்சைக்குரிய தேர்வு/புறக்கணிப்புகளில் முதன்மையானது, 2019 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் அம்பாதி ராயுடு புறக்கணிக்கப்பட்டு விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டது. 2017ம் ஆண்டிலிருந்தே, ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் 4ம் வரிசை வீரருக்கான தேடல் ஆரம்பித்துவிட்டது. ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ராயுடு உட்பட பல வீரர்கள் அந்த வரிசையில் இறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். ஷ்ரேயாஸ் ஐயர் 2017 இலங்கைக்கு எதிராக அறிமுகமான தொடரிலேயே சிறப்பாக ஆடினார். ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அவருக்கு பின் இந்திய அணியில் 4ம் வரிசையில் இறக்கிவிடப்பட்ட அம்பாதி ராயுடு, ஆசிய கோப்பை, நியூசிலாந்து சுற்றுப்பயணம் ஆகிய தொடர்களில் அருமையாக ஆடினார். அவர்தான் உலக கோப்பைக்கான இந்திய அணியின் 4ம் வரிசை வீரர் என அனைவருமே நம்பினர். கேப்டன் கோலியும் அதே கருத்தை கூற, கிட்டத்தட்ட அம்பாதி ராயுடுவிற்கான இடம் உறுதியாகிவிட்டதாகவே பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ராயுடுவை உலக கோப்பைக்கான அணியில் எடுக்காமல் விஜய் சங்கரை தேர்வு செய்து அதிர்ச்சியளித்த தேர்வுக்குழு, அவர் 3டி பிளேயர் என்று அதை நியாயப்படுத்த முயற்சித்தது.

ஆனால் எந்த மிடில் ஆர்டர் பிரச்னைக்காக இந்திய அணி பல வீரர்களை பரிசோதித்ததோ, அதற்கு பலனே இல்லாத வகையில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 240 ரன்களை விரட்ட முடியாமல் தோல்வியடைந்த இந்திய அணி தொடரை விட்டு வெளியேறியது.

அந்த உலக கோப்பைக்கான இந்திய அணியில் தோனி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய 3 விக்கெட் கீப்பர்கள் எடுக்கப்பட்டிருந்தனர். ஆனால் உருப்படியான ஒரு மிடில் ஆர்டர் வீரர் அணியில் எடுக்கப்படவில்லை. 

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்காலத்தை முடித்துவிட்ட ரவி சாஸ்திரி அந்த சர்ச்சைக்குரிய தேர்வு குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, உலக கோப்பைக்கான அணியில் 3 விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்ததில் எனக்கு உடன்பாடில்லை. ராயுடு - ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் கண்டிப்பாக அணியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தோனி - ரிஷப் - தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரையும் அணியில் எடுப்பதில் என்ன லாஜிக்?

ஆனால் நான் ஒருபோதும் தேர்வாளர்களின் பணியில் குறுக்கிட்டதில்லை. அணி தேர்வு குறித்து என்னை கேட்டால் மட்டுமே எனது கருத்தை கூறுவேனே தவிர, நானாக சென்று எதையும் சொல்லமாட்டேன் என்று சாஸ்திரி கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios