சச்சின் டெண்டுல்கர் செய்த ஒரு அட்ஜஸ்ட்மெண்ட்டை விராட் கோலி செய்யத் தவறுவதுதான் அவரது இறங்குமுகத்திற்கு காரணம். இந்த சரிவிலிருந்து மீண்டு வந்துவிட்டால் ஓராண்டுக்கு 10 சதங்கள் அடிப்பார் கோலி என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கோலி அவரது கெரியரில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளார். 2 ஆண்டுகளாக கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலியிடமிருந்து எப்போது 71வது சதம் வரும் என இந்திய அணியும் ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
விராட் கோலி அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து, ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசப்படும் பந்தை கவர் டிரைவ் ஆடமுயன்றுதான் அவுட்டாகி கொண்டிருக்கிறார். ஆனாலும் அதே தவறை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் அவரிடமிருந்து அவரது டிரேட்மார்க் இன்னிங்ஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வரவில்லை.
விராட் கோலி பெரிய வீரராக உருவெடுக்க ஆரம்பத்ததிலிருந்து, தொடர்ச்சியாக சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்பட்டு வந்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்பட்டது மட்டுமல்லாது, இருவரில் யார் சிறந்த வீரர் எனுமளவிற்கு சச்சினுடனான கோலியின் ஒப்பீடு நிகழ்ந்திருக்கிறது.
அந்தவகையில், சச்சின் செய்யாமல் தவிர்த்த ஒரு தவறை விராட் கோலி செய்ததுதான் அவரது சறுக்கலுக்கு காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரஷீத் லத்தீஃப், விராட் கோலி அதிகமாக அக்ராஸ்(across) ஆடுகிறார். கோலி மிகச்சிறந்த வீரர். ஆனால் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கிறார். பேட்டை பிடிக்கும்போது அடியில் இருக்கும் கையை(பாட்டம் ஹேண்ட்) பயன்படுத்தி பேட்டிங் ஆடும் வீரர்கள், அக்ராஸ் ஆடினால் கேட்ச் கொடுக்கத்தான் நேரிடும். அதனால் தான் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்துக்கு அவுட்டாகிறார் கோலி. லோ பிட்ச்களில் சச்சின் டெண்டுல்கர் அவுட்டே ஆகமாட்டார். ஆனால் விராட் கோலி எளிதாக ஆட்டமிழக்கிறார். சச்சின் அவரது பேட்டிங் வியூகத்தை மாற்றிக்கொள்வார். லோ பிட்ச்களில் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ளும்போது க்ரீஸுக்கு உள்ளே நகர்ந்துவிடுவார். லோ பிட்ச்களில் சச்சினுக்கும் பிரச்னை இருந்திருக்கிறது. 2006ம் ஆண்டு கராச்சி டெஸ்ட்டில் முகமது ஆசிஃபிடம் அவுட்டாகியிருக்கிறார். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அட்ஜஸ்ட் செய்துகொள்வார். மோசமான பிட்ச்களில் சச்சின் டெண்டுல்கர் மாதிரியான சிறந்த வீரர் வேறு யாருமே கிடையாது.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது பிட்ச் உடைந்திருந்தது. அந்த மோசமான பிட்ச்சில் நன்றாக பின் சென்று அருமையாக பேட்டிங் ஆடி மிகவும் பயனுள்ள 40-50 ரன்களை அடித்தார். அதுதான் சச்சினுக்கும் கோலிக்கும் இடையேயான வித்தியாசம். கோலி பேட்டிங்கில் செய்யும் தவறு அதுதான். கண்டிப்பாக கோலி அவரது தவறை களைய முயற்சிப்பார்; அதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருப்பார் என உறுதியாக நம்புகிறேன். இந்த சரிவிலிருந்து கோலி மீண்டுவிட்டால், ஆண்டுக்கு 10 சதங்கள் அடிப்பார் என்று ரஷீத் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
