உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடிவருகின்றன. மான்செஸ்டரில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில்  பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்கள் கப்டில் மற்றும் நிகோல்ஸ் ஆகிய இருவரும் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். முதல் இரண்டு ஓவர்களில் ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. மூன்றாவது ஓவரில்தான் முதல் ரன்னே எடுக்கப்பட்டது. நான்காவது ஓவரில் கப்டிலின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.

அதன்பின்னர் கேப்டன் வில்லியம்சனும் நிகோல்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அவர்கள் பார்ட்னர்ஷிப்பை நிலைக்கவிடாத ஜடேஜா, நிகோல்ஸை கிளீன் போல்டாக்கி அனுப்பினார். நிகோல்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வில்லியம்சனுடன் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார்.

4வது ஓவரிலேயே களத்திற்கு வந்த வில்லியம்சன், பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் களத்தில் நிலைத்துவிட்ட அவரை பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் 67 ரன்களில் சாஹல் வீழ்த்தினார். இதற்கிடையே ரோஸ் டெய்லரின் கேட்ச்சை பும்ரா வீசிய 32வது ஓவரில் கோட்டைவிட்டார் தோனி.

வில்லியம்சன் ஆட்டமிழந்தாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி டெய்லரும் அரைசதம் அடித்தார். ஜேம்ஸ் நீஷம் 12 ரன்களிலும் கிராண்ட் ஹோம் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டெய்லரும் லேதமும் களத்தில் நின்றிருந்தனர். 47வது ஓவரின் முதல் பந்தை புவனேஷ்வர் குமார் வீசினார். அப்போது மழை குறுக்கிட்டதால் அத்துடன் போட்டி தடைபட்டது. மழை நின்றபின்னர் போட்டி மீண்டும் நடத்தப்படும். 46.1 ஓவரில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை எடுத்துள்ளது. டெய்லரும் லேதமும் களத்தில் இருந்தனர். 

போட்டி நடந்துவரும் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்டு ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்புகிறது. அதனால் பேட்டிங்கிற்கு பெரியளவில் சாதகமாக இல்லை. எனவே நியூசிலாந்து அணி அடித்திருப்பது ஓரளவிற்கு நல்ல சவாலான ஸ்கோர் தான். 250 ரன்களுக்கு மேல் நியூசிலாந்து அணி அடித்துவிட்டால், இந்திய அணிக்கு சேஸிங் கடும் சவாலாகவே இருக்கும்.