வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று தொடங்கியது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு அணிகளுக்குமே இது முதல் போட்டி. 

இந்த போட்டியில் இந்திய அணியில் ரோஹித் - ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் யார் இறக்கப்படுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. கங்குலி, சேவாக், அக்தர் ஆகியோர் ரோஹித்தைத்தான் சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். 

ஆனால் ரோஹித் சர்மாவிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஹனுமா விஹாரி தான் அணியில் எடுக்கப்பட்டிருந்தார். அதேபோல அஷ்வின் - குல்தீப் இருவரில் யார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ரோஹித்தும் அஷ்வினும் தான் எடுக்கப்பட வேண்டும் என்று சேவாக் தெரிவித்திருந்தார். 

ரோஹித் - அஷ்வின் இருவரும் அணியில் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புதான் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹனுமா விஹாரியும், ஸ்பின்னராக ஜடேஜாவும் அணியில் எடுக்கப்பட்டிருந்தனர். ரோஹித் புறக்கணிப்பை கூட ஏற்றுக்கொண்ட கவாஸ்கர், அஷ்வினின் புறக்கணிப்பு தனக்கு அதிர்ச்சியாக இருப்பதாக கமெண்ட்ரியில் தெரிவித்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்திருக்கும் அஷ்வினுக்கும் ஆடும் லெவனில் இடமில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது என்றார் கவாஸ்கர். 

இந்நிலையில், முதல் நாள் ஆட்டத்தில் 81 ரன்கள் அடித்து இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டெடுத்த ரஹானே, முதல் நாள் ஆட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரோஹித் - அஷ்வின் புறக்கணிப்பிற்கான காரணத்தை தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய ரஹானே, அஷ்வின் மாதிரியான ஒரு வீரர் ஆடாதது துரதிர்ஷ்டவசமானதுதான். ஆனால் அணி நிர்வாகம், அணிக்கு தேவையான சரியான காம்பினேஷனை மட்டுமே கருத்தில்கொண்டு ஆடும் லெவனை தேர்வு செய்கிறது. இந்த ஆடுகளத்திற்கு ஜடேஜா சரியாக இருப்பார் என கருதியதால் அவர் எடுக்கப்பட்டார். அதேபோல ஆறாவது பேட்ஸ்மேன், பவுலிங் போடக்கூடியவராக இருக்க வேண்டும் என கருதியதால், ஹனுமா விஹாரி பவுலிங் வீசுவார் என்பதால் அவர் எடுக்கப்பட்டார். இதைத்தான் கேப்டனும் பயிற்சியாளரும் ஆலோசித்தனர். அஷ்வின், ரோஹித் மாதிரியான சிறந்த வீரர்கள் ஆடாமல் இருப்பது கஷ்டமான விஷயம் தான். ஆனால் அணியின் தேவைக்கேற்பவே வீரர்கள் தேர்வு என்று ரஹானே விளக்கமளித்தார்.