தனது டெஸ்ட் கிரிக்கெட் கெரியரை தக்கவைக்க கண்டிப்பாக சிறப்பாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் அதிரடியாக அடித்து ஆடி அசத்திவருகிறார். 

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர்களாக, அனுபவம் வாய்ந்த புஜாராவும் ரஹானேவும் திகழ்ந்தனர். 3ம் வரிசையில் புஜாரா, 5ம் வரிசையில் ரஹானே என இந்திய பேட்டிங் ஆர்டரின் முக்கியமான வீரர்கள் இவர்கள். 

ராகுல் டிராவிட்டுக்கு பிறகு டெஸ்ட் அணியில் அவர் ஆடிவந்த 3ம் வரிசையை பிடித்த புஜாரா, 93 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6605 ரன்களை குவித்துள்ளார். ரஹானே 80 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4863 ரன்களை குவித்துள்ளார்.

இந்திய பேட்டிங் ஆர்டரின் தூண்களாக திகழ்ந்துவந்த புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக ஆடிவருகின்றனர். புஜாரா 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ரஹானேவும் படுமோசமாக ஆடிவருகிறார்.

ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் ஐயர் என வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில், தொடர்ச்சியாக புஜாராவும் ரஹானேவும் சொதப்பினால் கூட, அவர்கள் இந்திய அணிக்கு அளித்த பங்களிப்பு மற்றும் அவர்களது திறமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளிக்கப்படுகிறது. 

ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் புஜாரா 3 ரன்னிலும், ரஹானே ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தனர். ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய வீரர்கள் வரிசைகட்டி நிற்பதால், 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸ் தான் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவருக்கும் கடைசி வாய்ப்பாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இதுதான் தங்களுக்கான கடைசி வாய்ப்பு என்பதை உணர்ந்திருந்த புஜாராவும் ரஹானேவும் 2வது இன்னிங்ஸில் தங்களது திறமையை நிரூபித்து அணியில் தங்களுக்கான இடத்தை தக்கவைப்பதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதை நல்லபடியாகவே தொடங்கியுள்ளனர்.

2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்கள் அடிக்க, தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் அடித்தது. 17 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் (8), மயன்க் அகர்வால் (23) ஆகிய இருவரும் ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்க, புஜாராவும் ரஹானேவும் ஜோடி சேர்ந்தனர்.

வாழ்வா சாவா இன்னிங்ஸில் ஜோடி சேர்ந்தனர் புஜாராவும் ரஹானேவும். புஜாரா தனது வழக்கமான இன்னிங்ஸை போல் மெதுவாக ஆடாமல், களத்திற்கு வந்தது முதலே அடிக்க வேண்டிய பந்துகளை கொஞ்சம் கூட யோசிக்காமல் அடித்து ஆடினார். கவர் டிரைவ், ஸ்டிரைட் டிரைவ், புல் ஷாட் என பவுண்டரிகளாக அடித்து ஆடிய புஜாரா 42 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களை விளாசினார். 2ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து 2ம் நாள் ஆட்டத்தை முடித்தார். அவருடன் இணைந்து ரஹானேவும் நல்லவிதமாக தொடங்கியுள்ளார். 

2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் அடித்துள்ளது. 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாராவின் வழக்கத்திற்கு மாறான அதிரடி பேட்டிங்கை இந்திய வீரர்கள் என்ஜாய் செய்து பார்த்த அதேவேளையில், தென்னாப்பிரிக்க வீரர்கள் புஜாராவின் திடீர் எழுச்சியை வியந்து பார்த்தனர்.