ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க, இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மும்பை வான்கடேவில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணி நிர்ணயித்த 256 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகிய இருவரும் சதமடித்து முதல் விக்கெட்டைக்கூட இழக்காமல் இலக்கை எட்டினர். இந்திய அணிக்கு அந்த படுதோல்வி மரண அடியாக விழுந்தது. 

இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இன்று ராஜ்கோட்டில் இரண்டாவது போட்டி நடக்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க முடியும். ஆஸ்திரேலியா அணி வென்றால் தொடரை வென்றுவிடும். எனவே வெற்றி கட்டாயத்துடன் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்குவதால், இதில் பரிசோதனைகள் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை. 

Also Read - போக்குக்காட்டிய தோனிக்கு ஆப்பு அடித்த பிசிசிஐ.. தோனியின் கெரியர் ஓவர்

கடந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி, தனது மூன்றாமிடத்தை ராகுலுக்கு வழங்கினார். ராகுல் நன்றாகத்தான் ஆடினார். ஆனால் கோலி நான்காம் வரிசையில் சரியாக ஆடவில்லை. ராகுலும் தவானும் மந்தமாக பேட்டிங் ஆடியதால், ஸ்கோர் குறைவாக இருந்ததால், கோலி களத்திற்கு வந்த நேரத்தில் அடித்து ஆட வேண்டிய சூழல் ஏற்பட்டது. கோலி அடித்து ஆட முற்பட்டு ஆட்டமிழந்தார். அதே, கோலி மூன்றாம் வரிசையில் இறங்கினால் ஆட்டத்தை அருமையாக எடுத்து சென்றிருப்பார். எனவே வெற்றி கட்டாயத்துடன் இந்திய அணி ஆடும் இந்த போட்டியில், பரிசோதனை முயற்சிகள் எதுவும் இருக்காது. கோலி மூன்றாம் வரிசையில் இறங்குவார். ராகுல் நான்காம் வரிசையில் இறங்குவார். 

ரிஷப் பண்ட் முதல் போட்டியில் தலையில் காயமடைந்ததால், இந்த போட்டியில் ஆடவில்லை. எனவே ராகுல் தான் விக்கெட் கீப்பிங் செய்வார். ரிஷப்புக்கு பதிலாக கேதர் ஜாதவ் அணியில் இணைய வாய்ப்புள்ளது. மனீஷ் பாண்டேவிற்கு வாய்ப்பில்லை. கேதர் ஜாதவ் பவுலிங்கும் வீசுவார் என்பதால் அவர்தான் அணியில் எடுக்கப்படுவார். 

Also Read - விராட் கோலியின் வீக்னெஸை கண்டுபிடித்த ஆடம் ஸாம்பா

அதேபோல ஃபாஸ்ட் பவுலர் ஷர்துல் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனி இந்த போட்டியில் ஆட வாய்ப்புள்ளது. டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுள்ள சைனி, இதுவரை ஒருநாள் போட்டிகளில் ஆடியதில்லை. எனவே இன்று தனது முதல் போட்டியை அவர் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், கேதர் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஷமி, பும்ரா.