இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளதால் அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்திய அணியும் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. 

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் கிட்டத்தட்ட செட்டில் ஆகிவிட்டது. பவுலிங் யூனிட்டில் சில மாற்றங்களை செய்து சில வீரர்கள் பரிசோதிக்கப்பட்டுவருகின்றனர். பும்ராவுடன் இணைந்து ஆடும் லெவனில் வீசப்போகும் பவுலர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய சீனியர் பவுலர்களுடன் நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோரும் உள்ளனர். அதேபோல சரியான ஸ்பின் பவுலிங் காம்பினேஷனை தேர்வு செய்வது அவசியம். 

எனவே இலங்கைக்கு எதிரான தொடரையும் இந்திய அணி பரிசோதனை செய்யும் களமாகவே பயன்படுத்தும். வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துவரும் இந்திய அணி, இலங்கையையும் வீழ்த்தி அந்த வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. 

இந்தியா - இலங்கை அணிகள் இதுவரை 6 முறை டி20 தொடர்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 5 முறை இந்திய அணி வென்றுள்ளது. ஒரு தொடர் சமனில் முடிந்ததே தவிர, டி20 தொடரில் இந்திய அணியை இலங்கை வீழ்த்தியதேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முதன்முறையாக, அதுவும் இந்திய மண்ணில் வைத்து இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் இலங்கை அணி உள்ளது. 

இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தியில் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் ஆடும் இந்திய அணி குறித்து பார்ப்போம். ரோஹித் சர்மாவிற்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், ஷிகர் தவானும் கேஎல் ராகுலும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 

மூன்றாம் வரிசையில் விராட் கோலி, நான்காம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், ஐந்தாம் வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோர் இறங்குவார்கள். ஆல்ரவுண்டராக ஷிவம் துபே ஆடுவார். ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோரும், இவர்களுடன் குல்தீப் யாதவும் ஆட வாய்ப்புள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு தொடரில் ஆட வாய்ப்பு பெற்ற குல்தீப் யாதவ், சிறப்பாக பந்துவீசி மீண்டும் தனது முத்திரையை பதித்து இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளார். அவர் நல்ல ரிதமில் உள்ளதால் அவர் தான் ஆட வாய்ப்புள்ளது. ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ராவுடன் நவ்தீப் சைனி இணைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

எனவே, வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்று, ஆனால் ஆட வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியிலும் ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகமே. 

உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான், கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, பும்ரா.