உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை தொடரில் இதுவரை வீழ்த்தப்படாத அணியாக நியூசிலாந்து திகழ்கிறது. 6 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது நியூசிலாந்து. பாகிஸ்தான் அணி 6 போட்டிகளில் ஆடி 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளை பெற்றுள்ளது. 

பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே படுமோசமாக அமைந்த நிலையில், அதன்பின்னர் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்துள்ளது. முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கிய பாகிஸ்தான், இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி கண்டது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதன்பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியடைந்தது.

இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி கண்டது.

இந்த வெற்றிக்கு பிறகு உத்வேகம் அடைந்துள்ள பாகிஸ்தான் அணி, எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி கட்டாயத்தில் உள்ள பாகிஸ்தான், இன்றைய போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை தொடரில் சுத்தமாகவே சரியாக ஆடாத அணியின் சீனியர் வீரர் ஷோயப் மாலிக், இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் டக் அவுட்டானார். இதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹாரிஸ் சொஹைல் சேர்க்கப்பட்டார். ஆடும் லெவனில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட சொஹைல், சிறப்பாக ஆடி 89 ரன்களை குவித்தார். 

எனவே நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியிலும் சொஹைலே ஆடுவார். ஷோயப் மாலிக் ஆடுவதற்கு வாய்ப்பே இல்லை. கடந்த போட்டியில் ஆடாத ஹசன் அலி, இந்த போட்டியில் ஆட வாய்ப்புள்ளது. நியூசிலாந்து அணியில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பில்லை. 

உத்தேச பாகிஸ்தான் அணி:

ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ஹஃபீஸ், ஹாரிஸ் சொஹைல், சர்ஃபராஸ் அகமது(கேப்டன்), ஹசன் அலி, இமாத் வாசிம், முகமது அமீர், வஹாப் ரியாஸ், ஷாஹீன் அஃப்ரிடி. 

நியூசிலாந்து அணி:

கப்டில், முன்ரோ, வில்லியம்சன்(கேப்டன்), டெய்லர், டாம் லதாம்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட் ஹோம், சாண்ட்னெர், ஃபெர்குசன், ஹென்ரி, ட்ரெண்ட் போல்ட்.