இடது கை ஸ்பின்னரான பிரக்யான் ஓஜா, இந்திய அணியில் 2008ம் ஆண்டு அறிமுகமானார். 2008ல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஓஜா, 2009ல் டெஸ்ட் அணியில் அறிமுகமானார். இந்திய அணிக்காக நீண்டகாலம் தொடர்ச்சியாக ஓஜா ஆடவில்லை. 

ஓஜா இந்திய அணிக்காக 24 டெஸ்ட், 18 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். தோனியின் கேப்டன்சியில் மட்டுமே ஓஜா தனது கெரியரில் ஆடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், யுவராஜ் சிங், அனில் கும்ப்ளே ஆகிய பல சிறந்த வீரர்களுடன் இணைந்து ஆடும் வாய்ப்பை பெற்றார் ஓஜா. 

தனது பவுலிங்கை மேம்படுத்த அனில் கும்ப்ளே உதவியிருப்பதாக தெரிவித்த ஓஜா, அனில் கும்ப்ளேவை பற்றி பேசியுள்ளார். விஸ்டனுக்கு அளித்த பேட்டியில் பேசிய ஓஜா, களத்தில் கும்ப்ளே மிகுந்த ஆக்ரோஷமாக இருப்பார். எதிரணி வீரர்களிடம் மட்டுமல்லாது சொந்த அணி வீரர்கள் மீதும் கோபப்படுவார். களத்தில் தான் அப்படி இருப்பாரே தவிர, களத்திற்கு வெளியே தனிப்பட்ட முறையில் ரொம்ப இனிமையானவர் என்று தெரிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியும் இருக்கிறார். ஓய்வுக்கு பிறகு 2016-2017 காலக்கட்டத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.