2020 ஐபிஎல் தொடரில் பவர் ப்ளேயர் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஐபிஎல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கும். இதில் பவர் ப்ளேயர் முறையை கொண்டுவந்தால், ஆட்டம் பன்மடங்கு விறுவிறுப்பாகும். 

பவர் ப்ளேயர் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து பிசிசிஐ கூட்டத்திலும் ஐபிஎல் கூட்டத்திலும் ஏற்கனவே விவாதித்து ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. இன்று மும்பையில் நடக்கும் ஐபிஎல் கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து இதை அடுத்த சீசனில் அறிமுகப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. 

பவர் ப்ளேயர் முறை என்றால் என்ன..?

பவர் ப்ளேயர் முறை என்பது, அனைத்து அணிகளும், ஆட்டத்தின் எந்த சூழலிலும் எந்த வீரருக்கு மாற்றாகவும் பென்ச்சில் இருக்கும் மற்றொரு வீரரை களமிறக்கலாம். அதனால் இதற்கு முன்பு இருந்ததை போல ஆடும் லெவனை அறிவிக்க வேண்டிய தேவையில்லை. மொத்தமாக 15 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். ஆட்டத்தின் இக்கட்டான சூழலில் வீரரை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம். 

அதாவது, கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 15 ரன்கள் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து, கடைசி பேட்ஸ்மேனாக பும்ரா இறங்க வேண்டியிருக்கிறது என்றால், அவரை இறக்காமல், எஞ்சியுள்ள 4 பேரில் நல்ல பேட்ஸ்மேன் இருந்தால் அவரை இறக்கலாம். ஒருவேளை ஹர்திக் பாண்டியா, பவுலிங் போடும்போது ஆடும் லெவனில் இல்லையென்றாலும் கூட, கடைசி ஓவரில் 15 ரன்களை அடிப்பதற்கு, பவுலருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை இறக்கிவிடலாம். இதுதான் பவர் ப்ளேயர். 

கடைசி ஓவரில் 10 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழலில், கடைசி ஓவரை வீச சரியான பவுலர் ஆடும் லெவனில் இல்லையெனில், பென்ச்சில் இருக்கும் நல்ல பவுலரை பயன்படுத்த விரும்பினால் பயன்படுத்திக்கொள்ளலாம். 

இது மட்டும் அறிமுகமானால், ஐபிஎல் போட்டிகள் வேற லெவல் விறுவிறுப்புடன் இருக்கும்.