உலக கோப்பை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த உலக கோப்பையில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. எனினும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அபாரமாக ஆடிவருவதாலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடக்க உள்ளதாலும் அந்த அணிக்கே அதிகமான வாய்ப்பு என கருதப்படுகிறது. 

விராட் கோலி, ரோஹித் சர்மா, வில்லியம்சன், வார்னர், ஸ்மித், ஜோ ரூட், பேர்ஸ்டோ, பட்லர் என பல சிறந்த வீரர்கள் இந்த உலக கோப்பையில் ஆடுகின்றனர். ஒரே தொடரில் உலகின் பல சிறந்த வீரர்கள் ஆடும் நிலையில், இங்கிலாந்து ஆடுகளங்களும் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்கப்பட கூட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில், இங்கிலாந்து அணி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், ஜோஸ் பட்லர் தான் இங்கிலாந்து அணியின் அபாயகரமான வீரர். கடந்த 2-3 ஆண்டுகளில் பட்லர் எந்தளவிற்கு வளர்ந்திருக்கிறார் என்பதை நான் பார்த்திருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக நான் இருந்தபோது பட்லருக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பை பெற்றேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் பட்லர் அசத்திவருகிறார். அதனால் என்னை பொறுத்தவரை பட்லர் தான் இங்கிலாந்தின் அபாயகரமான வீரர். மிடில் ஆர்டரில் அவர் மிரட்டலாக பேட்டிங் ஆடுகிறார் என்று பாண்டிங் பாராட்டியுள்ளார். 

2018 ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக அசத்தலாக பேட்டிங் ஆடிய பட்லர், அதன்பின்னர் அசாத்திய ஃபார்மில் இருக்கிறார். அவர் கண்டிப்பாக உலக கோப்பையில் இங்கிலாந்து அணியில் ஜொலிப்பார் என்பதி ஐயமேயில்லை.