ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளையுடன் லீக் சுற்று முடிவடைந்து 7ம் தேதி முதல் பிளே ஆஃப் தொடங்குகிறது. 

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. எஞ்சிய ஒரு இடத்தை பிடிப்பதற்கு கேகேஆர், சன்ரைசர்ஸ், பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. 

இந்நிலையில், கேகேஆரும் பஞ்சாப்பும் வெற்றி கட்டாயத்தில் நேற்றைய போட்டியில் மோதின. இந்த போட்டியில் கேகேஆரிடம் பஞ்சாப் அணி தோற்றதால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. சன்ரைசர்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. 

சன்ரைசர்ஸ் அணி கடைசி போட்டியில் ஆர்சிபியையும் கேகேஆர் அணி மும்பை இந்தியன்ஸையும் எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் முனைப்பில் உள்ளதால் அந்த போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணிதான் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும். ஒருவேளை கேகேஆர் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மாபெரும் வெற்றி பெற்றால் கேகேஆர் அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. 

அப்படியில்லாமல் கடைசி போட்டியில் இரு அணிகளில் ஏதாவது ஒரு அணி வென்றால் அந்த அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெறும். ஒருவேளை கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய இரு அணிகளுமே அவற்றின் கடைசி போட்டியில் தோற்று, அதேநேரத்தில் கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றால் ராஜஸ்தான் அணிதான் பிளே ஆஃபிற்கு முன்னேறும். ஏனெனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 புள்ளிகளை பெற்றுள்ளது. கடைசி போட்டியில் வென்றால் 13 புள்ளிகளை பெறும். சன்ரைசர்ஸும் கேகேஆரும் கடைசி போட்டியில் தோற்றால் 12 புள்ளிகளுடன் வெளியேற நேரிடும். 

ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மட்டுமே லீக் சுற்றுடன் உறுதியாக வெளியேறுகிறது. சன்ரைசர்ஸ், கேகேஆர், ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்குமே பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் வாய்ப்புள்ளது.