இங்கிலாந்து - அயர்லாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை 2-0 என வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி, இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 328 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, மூன்றாம் வரிசையில் இறங்கிய ஜேம்ஸ் வின்ஸும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். 44 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் கேப்டன் இயன் மோர்கனும் டாம் பாண்ட்டனும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இருவருமே அதிரடி வீரர்கள் என்பதால் அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய கேப்டன் மோர்கன் சதமடித்தார். 84 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 106 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்டுக்கு மோர்கனும் பாண்ட்டனும் சேர்ந்து 146 ரன்கள் சேர்த்தனர். மோர்கனுடன் இணைந்து சிறப்பாக ஆடிய பாண்ட்டன் அரைசதம் அடித்தார். ஆனால் அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 58 ரன்களில் ஆட்டமிழந்தார் பாண்ட்டன். 

மோர்கனும் பாண்ட்டனும் சேர்ந்து வேகமாக ஸ்கோர் செய்து கொடுத்தனர். 28வது ஓவரிலேயே 200 ரன்களை கடந்துவிட்டது இங்கிலாந்து. ஆனால் மொயின் அலி, சாம் பில்லிங்ஸ் ஆகிய இருவரும் சரியாக ஆடாமல் ஏமாற்றமளித்து சொற்ப ரன்களில் நடையை கட்ட, டேவிட் வில்லியும் டாம் கரனும் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடந்த போட்டியில் நன்றாக பேட்டிங் ஆடிய வில்லி, இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் அடித்து வில்லி ஆட்டமிழக்க, அடில் ரஷீத்  3 ரன்னும் மஹ்மூத் 12 ரன்னும் அடித்து அவுட்டாகினர். டாம் கரன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் அடித்திருந்தார். இதையடுத்து 49.5 ஓவரில் 328 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. 

329 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் டெலானி 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரும் அணியின் சீனியர் வீரருமான பால் ஸ்டர்லிங்கும் மூன்றாம் வரிசையில் இறங்கி அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பல்பிர்னியும் அபாரமாக ஆடினர். 

ஸ்டர்லிங் - பால்பிர்னி ஜோடியை இங்கிலாந்து பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. 50 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த அயர்லாந்து அணிக்கு இரண்டாவது விக்கெட்டுக்கு 214 ரன்களை சேர்த்து கொடுத்தனர் அவர்கள். அதிரடியாக ஆடிய ஸ்டர்லிங் சதமடிக்க, அவரை தொடர்ந்து பல்பிர்னியும் சதமடித்தார். ஸ்டர்லிங் 148 ரன்களும் பல்பிர்னி 113 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் டெக்டாரும் கெவின் ஓ பிரயனும் இணைந்து எஞ்சிய 50 ரன்களை அடித்து அயர்லாந்து அணியை வெற்றி பெற செய்தனர். கடைசி ஓவரின் 5வது பந்தில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அயர்லாந்து. 

முதலிரண்டு போட்டிகளில் தோற்று தொடரை இழந்தாலும், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை பெற்றது அயர்லாந்து. உலக கோப்பையை வென்ற சாம்பியன் அணியான இங்கிலாந்து, 328 ரன்களை குவித்தும் சொந்த மண்ணில் அயர்லாந்தை வீழ்த்த முடியாமல் மண்ணை கவ்வியுள்ளது.