இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று மான்செஸ்டரில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

ஐசிசி சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்கியுள்ளன. இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் செம ஃபார்மில் மிகச்சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணிக்கு வெற்றிகளை குவித்து கொண்டிருக்கிறார். அவர் இருக்கும் ஃபார்முக்கு அவரை சமாளிப்பது பாகிஸ்தான் அணிக்கு கடும் சவால். 

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஆண்டர்சன், பிராட், வோக்ஸ் ஆகிய சிறந்த அனுபவ வீரர்களும் ஓலி போப், சிப்ளி, ஆர்ச்சர் போன்ற இளம் வீரர்களும் என மிகச்சிறந்த கலவையிலான மற்றும் வலுவான அணியாக இங்கிலாந்து திகழ்கிறது. 

அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பாபர் அசாம், அபித் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஷதாப் கான் ஆகிய மிகச்சிறந்த இளம் வீரர்களை கொண்ட துடிப்பான அணியாக திகழ்கிறது. 

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஓலி போப், கிறிஸ் வோக்ஸ், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

பாகிஸ்தான் அணி:

ஷான் மசூத், அபித் அலி, அசார் அலி(கேப்டன்), பாபர் அசாம், ஆசாத் ஷாஃபிக், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், யாசிர் ஷா, முகமது அப்பாஸ், ஷாஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா.
 
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லிக்கு இந்த போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு இன்னிங்ஸில் மட்டுமே அரைசதம் அடித்தார் கிராவ்லி. மற்ற மூன்று இன்னிங்ஸ்களில் ஒன்றில் டக் அவுட். மற்ற இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 21 ரன்கள் மட்டுமே அடித்தார். எனவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியின் 22 வயதே ஆன இளம் வீரர் ஓலி போப் அருமையாக ஆடினார். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 91 ரன்களை 150 பந்துகளில் குவித்தார் ஓலி போப். பென் ஸ்டோக்ஸ்,  ஜோ ரூட் ஆகிய சீனியர் வீரர்களே திணறிய அந்த இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக ஆடி அணியின் மானத்தை காப்பாற்றியவர் ஓலி போப். அந்த போட்டியில் அவர் அவரது பேட்டிங் மிகச்சிறப்பாகவும் தெளிவாகவும் இருந்தது. எனவே பேட்டிங் ஆர்டரில் வலுசேர்க்கும் ஓலி போப்பிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.