இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்களாக பாபர் அசாம் மற்றும் ஃபகர் ஜமான் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஃபகர் ஜமான் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ஹாரிஸ் சொஹைல், முகமது ரிஸ்வான், ஆசிஃப் அலி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் பாபர் அசாம் 38 பந்துகளில் அரைசதம் அடித்து ரன் அவுட்டானார். 

பாபர் அசாமின் விக்கெட்டுக்கு பிறகு, அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய இஃப்டிகர் அகமதுவின் மீது முழு பொறுப்பும் இறங்கியது. அதை உணர்ந்து அபாரமாக ஆடினார் அவர். 18 ஓவரில் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் அடித்திருந்தது. ரிச்சர்ட்ஸன் வீசிய 19வது ஓவரை பொளந்துகட்டிவிட்டார் இஃப்டிகர் அகமது. 

ரிச்சர்ட்ஸன் வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் உட்பட 22 ரன்களை குவித்தார் இஃப்டிகர். ஆனால் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில், இஃப்டிகர் அகமதுவால் பெரிதாக அடிக்க முடியவில்லை. கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்கமுடியவில்லை. அந்த ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டதால், 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 150 ரன்கள் அடித்துள்ளது. இஃப்டிகர் அகமது 34 பந்துகளில் 62 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

வார்னர், ஃபின்ச், ஸ்மித், அலெக்ஸ் கேரி, அஷ்டன் டர்னர் என அதிரடி பட்டாளத்தை கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு இது சாதாரண இலக்கு.