இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 

முதல் போட்டி ராவல்பிண்டியில் நடந்துவருகிறது. இந்த போட்டியின் பெரும்பாலான ஆட்டம் மழையாலும் போதிய வெளிச்சமின்மையாலும் மைதானம் ஈரமாக இருந்ததாலும் பாதிக்கப்பட்டது.

இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இரண்டு நாள் ஆட்ட முடிவில் வெறும் 87 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் அடித்துள்ளது. மூன்றாம் நாளான இன்றைய ஆட்டமும் மதியம் ஒரு மணி வரை தொடங்கப்படவே இல்லை. மூன்றாம் நாள் ஆட்டத்திலும் இதுவரை ஒன்றரை செசன் பாதிக்கப்பட்டுவிட்டது. 

இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்ததும் மாலையில் இலங்கை வீரர் டிக்வெல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த ப்ரஸ் மீட்டிற்கு வந்த செய்தியாளர்களில் ஒருவர், ப்ரஸ் மீட்டிற்கு வந்த வீரர் டிக்வெல்லா என்று தெரியாமல், தனஞ்செயா டி சில்வா என்று நினைத்துகொண்டார். டி சில்வா என்று கூறி கேள்வியை தொடங்கினார். 

உடனே, டிக்வெல்லா, நான் டி சில்வா இல்லை.. டிக்வெல்லா என்றார். டிக்வெல்லா, தான் டி சில்வா என்று கூறிய பின்னரும், அதை புரிந்துகொள்ளாத செய்தியாளர், நீங்க நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்.. சதமடிப்பீர்களா என்று கேள்வியெழுப்பினார். 

நானா? நான் எப்படி சதமடிக்க முடியும்.. நான் டி சில்வா இல்லை.. டிக்வெல்லா.. நான் ஏற்கனவே அவுட்டாகி பெவிலியனில் இருக்கிறேன். வேண்டுமென்றால் இரண்டாவது இன்னிங்ஸில் அடிக்கலாம் என்று சிரித்துக்கொண்டே கூறினார். 

ப்ரஸ் மீட்டிற்கு வந்த வீரர், யார் என்றே தெரியாமல் பாகிஸ்தான் செய்தியாளர் கேள்வி கேட்டது சர்வதேச அளவில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.