உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது. 

பாகிஸ்தான் அணி முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. வெறும் 105 ரன்கள் மட்டுமே அடித்து அந்த எளிய இலக்கை 14வது ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸை அடிக்கவிட்டு படுதோல்வியை அடைந்தது. அதன்பின்னர் ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோற்றது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானது. முதற்பாதியில் சரியாக ஆடாத பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து வெகுண்டெழுந்தது. 

ஆஃப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று 11 புள்ளிகளை பெற்றபோதிலும் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் நியூசிலாந்து அணி நான்காவது அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது. 

இந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் பெரும்பாலான தருணங்களில் பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர். பேட்டிங் சரியாக இல்லாததுதான் அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. 

இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் சதமடித்தார். பாகிஸ்தான் அணியும் அந்த போட்டியில் வென்றது. ஆனாலும் அந்த சதத்தால் பயனில்லை என்பதோடு அந்த சதமடிக்கப்பட்ட விதம் திருப்தியளிக்காததால், அந்த சதத்தை நான் குப்பையில் தான் போடுவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீரர் அகமது காட்டமாக தெரிவித்துள்ளார். 

ஊடகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தன்வீரர் அகமது, இமாம் உல் ஹக்கின் சதத்தை குப்பையில் தான் போடுவேன் என்று அதிரடியாக கூறினார். மேலும் இமாம் உல் ஹக்கின் ஆட்டத்தை வக்கார் யூனிஸ் போன்றவர்கள் விமர்சிக்க மாட்டார்கள். ஏனெனில் இமாமின் மாமா இன்சமாம் உல் ஹக்குடனான அவர்களது உறவை பேணிக்காக்கும் நோக்கில் இமாம் உல் ஹக்கை விமர்சிக்கமாட்டார்கள் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

தன்வீரர் அகமதுவின் வெளிப்படையான குற்றச்சாட்டும் அதிரடியான கருத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இமாம் உல் ஹக்கை தன்வீரர் அகமது விமர்சித்தாலும் இந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரராக இமாம் தான் உள்ளார். பாபர் அசாம் 474 ரன்களையும் இமாம் உல் ஹக் 305 ரன்களையும் அடித்துள்ளனர்.