பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான அஃப்ரிடி, தனது சுயசரிதையை “கேம் சேஞ்சர்” என்ற பெயரில் எழுதி வெளியிட்டுள்ளார். 

அதில் தனது உண்மையான வயதை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். அதிகாரப்பூர்வ ஆவணங்களில் உள்ளதைவிட தனக்கு 5 வயது அதிகம் எனக்கூறி சர்ச்சையை கிளப்பினார். அதுமட்டுமல்லாமல் காம்பீரை கடுமையாக தாக்கி எழுதியிருந்தார். காம்பீர் கிரிக்கெட்டில் பெரிய சாதனை எதுவும் செய்யாவிட்டாலும் திமிருக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்று கடுமையாக சாடியிருந்தார். 

காம்பீரின் கேரக்டரும் செயல்பாடுகளும் மோசமானது என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். அஃப்ரிடியின் விமர்சனத்துக்கு காம்பீர் பதிலடி கொடுக்க, அதற்கு அஃப்ரிடி மீண்டும் பதிலடி கொடுக்க, இருவரது வாக்குவாதமும் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. 

காம்பீரை மட்டுமல்லாது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்களான ஜாவித் மியான்தத், வக்கார் யூனிஸ் ஆகியோரையும் கடுமையாக விமர்சித்திருந்தார். உள்நாட்டு வீரர்கள் - வெளிநாட்டு வீரர்கள் என்ற பாரபட்சம் எல்லாம் இல்லாமல் கடுமையாக தாக்கியிருந்தார் அஃப்ரிடி. 

அஃப்ரிடியின் சுயசரிதையை படித்துவிட்டு வக்கார் யூனிஸ் உட்பட சிலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் இம்ரான் ஃபர்ஹத் அஃப்ரிடியை கடுமையாக விமர்சித்துள்ளார். அஃப்ரிடியின் சுயசரிதை குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் ஃபர்ஹத், அஃப்ரிடியின் புத்தகத்தை படித்துவிட்டு பலரும் பேசியதை கேட்டபோது அசிங்கமாக இருந்தது. ஒரு வீரர் உண்மையான வயதை மறைத்து நல்லவர் மாதிரி வேடமிட்டு கிரிக்கெட் ஆடிவிட்டு, மிகப்பெரிய சிறந்த வீரர்களை விமர்சிப்பது அசிங்கமாக இருக்கிறது.

நல்லவர் போல வேடமிட்டு துறவி போன்று காட்சியளிக்கும் அஃப்ரிடியை பற்றி நிறைய கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னைப்போலவே பல வீரர்களிடம் அஃப்ரிடி பற்றிய கதைகள் இருக்கும். அவர்களும் தாமாக முன்வந்து சுயநலவாதியான அஃப்ரிடியின் முகத்திரையை கிழிக்க வேண்டும். ஏராளமான வீரர்களின் வாழ்க்கையை தனது சுயநலத்துக்காக அஃப்ரிடி அழித்துள்ளார் என்று இம்ரான் ஃபர்ஹத் கடுமையாக விமர்சித்துள்ளார்.