உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி கலவையான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. 

பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே படுமோசமாக அமைந்த நிலையில், அதன்பின்னர் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்துள்ளது. முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கிய பாகிஸ்தான், இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி கண்டது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதன்பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியடைந்தது.

இந்திய அணிக்கு எதிரான தோல்வியை அடுத்து கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது பாகிஸ்தான் அணி. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, பவுலிங் தேர்வு செய்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்தியாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தாறுமாறாக வசைபாடினர். 

அதன்பின்னர் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, அந்த அணியை வீழ்த்தி வெற்றி கண்டது. இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை தழுவிவருவதால் பாகிஸ்தான் அணி எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. 

எனவே வெற்றி கட்டாயத்தில் வலுவான நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி. இந்நிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்துர், இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து எனக்கு அதிகமான அழுத்தங்கள் வந்தன. தாங்க முடியாத அளவிற்கு அழுத்தங்கள் இருந்தன. அந்த அழுத்தங்களை சமாளிக்க முடியாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற அளவுக்கு எனக்கு நினைக்க தோன்றியது. ஆனால் இது ஒரு போட்டிதானே, இன்னும் நிறைய போட்டிகள் இருக்கின்றன. அவற்றில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் என்னை தேற்றிக்கொண்டேன்.

ஊடகங்களின் விமர்சனம், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றால் கண்டிப்பாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கி, அந்த அணியை வீழ்த்தி வெற்றியும் கண்டோம். இனிவரும் 3 போட்டிகளுமே எங்களுக்கு ரொம்ப முக்கியம். எனவே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆடுவோம் என்று ஆர்துர் நம்பிக்கை தெரிவித்தார். 

ஒரு தோல்விக்காக பயிற்சியாளரே தற்கொலை செய்துகொள்ள நினைப்பது மன வலிமையின்மையை காட்டுகிறது. பயிற்சியாளரே மனதளவில் இவ்வளவு வீக்காக இருந்தால், அவர் எப்படி அணியை சிறப்பாக வழிநடத்த முடியும்?