உலக கோப்பை தொடரில் ஐந்து வெற்றிகளையும் நியூசிலாந்து அணிக்கு நிகராக 11 புள்ளிகளையும் பெற்றும் கூட அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது பாகிஸ்தான் அணி. இது அந்த அணிக்கு துரதிர்ஷ்டமான சம்பவம்தான்.

நியூசிலாந்து அணிக்கு நிகராக 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் குறைவாக இருந்ததால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான் அணி. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான படுதோல்வி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகள் என தொடர் தோல்விகளுக்கு பிறகு வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளையும் தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி கண்டது. 

இந்த உலக கோப்பை தொடரின் முதற்பாதியில் படுமோசமாக சொதப்பிய பாகிஸ்தான் அணி அதிலிருந்து மீண்டெழுந்து பிற்பாதியில் அசத்தியது. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி மற்றும் அவரது ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்குள்ளானது. சர்ஃபராஸ் அகமது குருட்டு லக்கில் கேப்டன் ஆனவர், மூளையில்லாத முட்டாள் கேப்டன் என்ற விமர்சனங்களை எல்லாம் அந்த அணியின் முன்னாள் வீரர்களே முன்வைத்தனர். 

ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்தி அணியை தொடர்ச்சியாக 4 வெற்றிகள் பெறும் அளவிற்கு கொண்டு சென்றார் சர்ஃபராஸ் அகமது. 

உலக கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி, நாடு திரும்பியது. கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சர்ஃபராஸ் அகமதுவிடம் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன்சியிலிருந்து விலகுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சர்ஃபராஸ் அகமது, ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும் எனது ஆட்டம் எனக்கு திருப்திகரமாக உள்ளது. எனவே நான் கேப்டன்சியிலிருந்து விலகமாட்டேன். அதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே முடிவு செய்யட்டும் என்று சர்ஃபராஸ் அகமது தெரிவித்தார்.