பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சரியாக ஆடவில்லை. ஷான் மசூத் டக் அவுட்டான நிலையில், அபித் அலி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹாரிஸ் சொஹைல் ஒரு ரன்னிலும், ஃபவாத் ஆலம் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய அசார் அலி அரைசதம் அடித்தார்.

அசார் அலியுடன் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடினார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ரிஸ்வான், 61 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து அசார் அலியும் 93 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த அறுபது ரன்களில் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி. 

நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கைல் ஜாமிசன் ஐந்து விக்கெட்டுகளையும் டிரெண்ட் போல்ட் மற்றும் டிம் சௌதி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணி 84 ஓவர்களில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. 2ம் நாளான நாளைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கும்.