உலக கோப்பை அணிக்கான சரியான வீரர்களை தேர்வு செய்வதற்காக இளம் வீரர்கள் பலருக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது. வழக்கமான இந்திய அணியில் இடம்பெறும் சீனியர் வீரர்களில் தவானின் இடம் மட்டும்தான் கேள்விக்குறியாக உள்ளது. தவான் அண்மைக்காலமாக மந்தமாக ஆடுவதுடன் முழு உடற்தகுதியுடன் இல்லாமல் அவ்வப்போது காயமடைந்துவருகிறார். எனவே அவருக்கான இடம் சந்தேகம் தான். ரிஷப் பண்ட் தான் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பதை அணி நிர்வாகம் உறுதியாக நம்புவதால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார். 

டி20 உலக கோப்பைக்கான அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ரோஹித், ராகுல், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், மனீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஷ்வர் குமார், சாஹல், க்ருணல் பாண்டியா/ஜடேஜா, தவான்/சஞ்சு சாம்சன், ஷமி ஆகியோர் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதில் ஒன்றிரண்டு மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவ்வாறு டி20 உலக கோப்பைக்கான அணி குறித்த எதிர்பார்ப்புகளும் கணிப்புகளும் இருந்துவரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, டி20 உலக கோப்பைக்கான அணியில் ஒரேயொரு இடம் மட்டுமே காலியாகவுள்ளதாக தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, உலக கோப்பைக்கான அணிக்கு உண்மையாகவே ஒரேயொரு இடத்திற்குத்தான் சில வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதில் 3 பேர் அவர்களுக்கான இடத்தை பிடித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இது மிகவும் ஆரோக்கியமான போட்டி. ஃபாஸ்ட் பவுலர்களுக்கு இடையேதான் அந்த போட்டி. 

பும்ராவும் புவனேஷ்வர் குமாரும் அனுபவம் வாய்ந்த பவுலர்கள். டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக நன்றாக வீசிவந்துள்ளனர். தீபக் சாஹர் அண்மையில் அருமையாக வீசியுள்ளார். ஷமி மீண்டும் அணிக்கு திரும்பி அபாரமாக வீசியுள்ளார். ஷமி ரிதத்தை பிடித்துவிட்டால், டி20 போட்டிகளில், அதுவும் ஆஸ்திரேலியாவில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்த வல்லவர். துல்லியமான யார்க்கர்களையும் வீசுவார் என்று தெரிவித்தார். 

இதன்மூலம் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் அணியில் இடம்பெறுவது உறுதி. எனவே ஒரேயொரு ஃபாஸ்ட் பவுலருக்கான இடத்திற்கு மட்டும்தான் போட்டி நிலவுவதாக கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.