ஐபிஎல் 14வது சீசன் நெருங்கிவரும் நிலையில், சிஎஸ்கே அணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் இந்தியாவில் அதிகரித்திருக்கும் நிலையில், ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஐபிஎல் அணிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிவருகிறது.
கேகேஆர் அணி வீரரான நிதிஷ் ராணாவுக்கு கொரோனா உறுதியான நிலையில், அடுத்ததாக மும்பை வான்கடே ஊழியர்கள் 8 பேருக்கு தொற்று உறுதியானது.

டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேலுக்கு கொரோனா இருப்பது இன்று உறுதியானது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் சமூக ஊடக பிரிவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஐபிஎல் நெருங்கும் நிலையில், அடுத்தடுத்து பலருக்கு கொரோனா தொற்று உறுதியாவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணியினர் மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். சிஎஸ்கே அணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள சிஎஸ்கே அணி நிர்வாகம், அவர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் யாருடனும் நெருங்கிய தொடர்பில் இல்லை என்பதால் அச்சமடைய தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
