வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியின் ஓலி போப் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி வருகின்றனர். 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்டில் நடந்துவருகிறது. முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால், கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்ல முடியும் என்றவகையில், இரு அணிகளுமே வெற்றி கட்டாயத்தில் கடைசி டெஸ்ட்டில் ஆடிவருகின்றனர். 

நேற்று தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர், இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டோமினிக் சிப்ளியும் ரோரி பர்ன்ஸும் களமிறங்கினர். 

கடந்த போட்டியில் சதமடித்த சிப்ளி, இந்த முறை முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். கீமார் ரோச்சின் பந்தில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் ஜோ ரூட் 17 ரன்களில் ரன் அவுட்டானார். 

இதையடுத்து ரோரி பர்ன்ஸுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் 20 ரன்களில் ரோச்சின் அருமையான பந்தில் கிளீன் போல்டானார். 92 ரன்களுக்கு இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் அரைசதம் அடித்தார். ஆனால் அவர் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. அரைசதம் அடித்த மாத்திரத்தில் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஓலி போப் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் அதற்காக மந்தமாக ஆடாமல், துணிச்சலாக அடித்து ஆடி சீராக ரன்களை குவித்தனர். வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு, அருமையாகவும் அனைத்து ஷாட்டுகளையும் மிகத்தெளிவாகவும் ஆடிய போப், 142 பந்தில் 91 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார். 

அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடிய பட்லரும் அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்துள்ளது. போப் 91 ரன்களுடனும் பட்லர் 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் களத்தில் நிலைத்துவிட்டது மட்டுமல்லாது, அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்வதால், இந்த ஜோடியை விரைவில் வீழ்த்தவில்லையென்றால், மெகா ஸ்கோரை இங்கிலாந்து அடிப்பது உறுதி.