உலக கோப்பை தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடந்தன. அதில் ஒரு போட்டியில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. 

மற்றொரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்டில், முன்ரோ இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர். எனினும் கேப்டன் வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 160 ரன்களை குவித்தனர். அரைசதமடித்த டெய்லர் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டாம் லதாம், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் வில்லியம்சனுடன் சிறிய பார்ட்னர்ஷிப் மட்டுமே அமைத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுமுனையில் நிலைத்து நின்ற வில்லியம்சன் சதமடித்து பெரிய இன்னிங்ஸ் ஆடினார். அபாரமாக ஆடி 148 ரன்களை குவித்த வில்லியம்சன், 47வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் டி கிராண்ட் ஹோம் மற்றும் மிட்செல் சாண்ட்னெர் சில பெரிய ஷாட்டுகளை ஆட, நியூசிலாந்து அணி 291 ரன்களை குவித்தது. 

292 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கெய்லும் ஷாய் ஹோப்பும் களமிறங்கினர். ஷாய் ஹோப் மற்றும் நிகோலஸ் பூரான் ஆகிய இருவருமே தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆனால் கெய்ல் சிறப்பாக ஆடினார். கெய்லும் ஹெட்மயரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். கெய்ல் சிறப்பாக ஆடியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி நம்பிக்கை பெற்றது. 

அரைசதம் அடித்த ஹெட்மயர் 51 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் ஹோல்டர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 23வது ஓவரில் ஹெட்மயர் மற்றும் ஹோல்டர் ஆகிய இருவரும் அவுட்டாக, அதற்கு அடுத்த ஓவரிலேயே நன்றாக ஆடிக்கொண்டிருந்த கெய்லும் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஆட்டத்தை பிராத்வெயிட் கையில் எடுத்தார். ஒருமுனையில் பிராத்வெயிட் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்க, மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. ஆனாலும் பிராத்வெயிட் போட்டியை கடைசி வரை டீப்பாக எடுத்துச்சென்றார். மேட் ஹென்ரி வீசிய 48வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 25 ரன்களை குவித்தார். 

ஆனால் 9 விக்கெட்டுகள் விழுந்துவிட்டதால் நெருக்கடியில் இருந்த பிராத்வெயிட்டுக்கு 49வது ஓவரில் கூடுதல் நெருக்கடியை அளித்தார் ஜேம்ஸ் நீஷம். 49வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் பிராத்வெயிட் ரன்னே எடுக்கவில்லை. 9 விக்கெட்டுகள் விழுந்துவிட்டதால் பிராத்வெயிட்டே ஸ்டிரைக்கில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் சிங்கிளும் எடுக்க முடியாது. அடித்தால் பெரிய ஷாட்டுதான் அடிக்க வேண்டும். 

கடைசி இரண்டு ஓவர்களில் வெறும் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனாலும் 49வது ஓவரை நீஷம் சிறப்பாக வீசினார். முதல் 5 பந்துகளில் பிராத்வெயிட் வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். அதன்பின்னர் அந்த ஓவரிலேயே போட்டியை முடித்துவிட நினைத்த பிராத்வெயிட், கடைசி பந்தை தூக்கி அடித்தார் அது நேராக லாங் ஆனில் நின்ற ட்ரெண்ட் போல்ட்டின் கைகளில் விழுந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.