உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. மழையால் அந்த ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இன்று தொடர்கிறது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி தடைபட்டது. அதன்பின்னர் மழை நிற்காததால் போட்டி நீண்ட நேரம் தடைபட்டிருந்தது. மழை ஒருமுறை நின்றதும் போட்டி தொடங்கப்பட வாய்ப்பிருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால் நேற்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு ரிசர்வ் நாளான இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு டெய்லரும் லேதமும் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் 47வது ஓவரை தொடர்ந்தார். அந்த ஓவரின் எஞ்சிய 5 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதற்கடுத்த ஓவரில் 74 ரன்கள் அடித்திருந்த டெய்லர் ரன் அவுட்டானார். கடைசி 2 ஓவர்களில் நியூசிலாந்து அணி வெறும் 14 ரன்கள் மட்டுமே அடிக்க, 239 ரன்களுக்கு நியூசிலாந்து இன்னிங்ஸ் முடிந்தது. 

இறுதி போட்டிக்கு முன்னேற 240 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி ஆடிவருகிறது.