உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. 

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டு ஆடிவருகிறது பாகிஸ்தான் அணி.

மழையால் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ஒருமணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

தொடக்க வீரர்களாக கப்டிலும் முன்ரோவும் களமிறங்க, முதல் ஓவரை முகமது ஹஃபீஸிடம் கொடுத்தார் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது. ஹஃபீஸ் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார் கப்டில். ஒரு சிங்கிள் தட்டி இரண்டாவது ஓவரில் ஸ்டிரைக் எடுத்தார் கப்டில். இரண்டாவது ஓவரை வீசிய முகமது அமீர், முதல் பந்திலேயே கப்டிலை வீழ்த்தினார். 

இதையடுத்து இரண்டாவது ஓவரிலேயே கேப்டன் கேன் வில்லியம்சன் களத்திற்கு வந்தார். வில்லியம்சன் முன்ரோவுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க நினைத்தார். ஆனால் வழக்கம்போலவே முன்ரோ மொக்கையாக ஆடி 12 ரன்களில் வெளியேறினார். இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹின் அஃப்ரிடியின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து வில்லியம்சனுடன் அனுபவ வீரர் டெய்லர் ஜோடி சேர்ந்தார். அவராவது பொறுப்பாக ஆடுவார் என்று எதிர்பார்த்தால், அவரும் ஏமாற்றமே அளித்தார். வெறும் 3 ரன்களில் ஷாஹின் அஃப்ரிடியின் பந்தில் டெய்லர் ஆட்டமிழக்க, வில்லியம்சனுடன் லேதம் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இந்த போட்டியில் வில்லியம்சன் கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆடி அணியை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் ஆடிவருகிறார்.