உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. வரும் 11ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அரையிறுதியில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் ஃபாஸ்ட் பவுலர் லாக்கி ஃபெர்குசன் ஆடுவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கப்டில் ஃபார்மில் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு. தொடக்க ஜோடி சொதப்பினாலும் மிடில் ஆர்டர் பேட்டிங் வலுவாக இருப்பது அணிக்கு பலம். ஃபாஸ்ட் பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. ட்ரெண்ட் போல்ட், ஃபெர்குசன் ஆகியோர் அசத்தலாக வீசிவருகின்றனர்.

ஃபெர்குசன் 145 முதல் 150 கிமீ வேகத்தில் வீசி மிரட்டுகிறார். அந்த அணி லீக் சுற்றின் ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை குவித்ததற்கு ஃபெர்குசனின் அபாரமான பவுலிங் முக்கியமான காரணன். ஆனால் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஃபெர்குசன் ஆடவில்லை. அவர் இல்லாததன் விளைவு அந்த போட்டியில் தெரிந்தது. 

இந்நிலையில், ஃபெர்குசன் முக்கியமான போட்டியான அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிராக ஆடுவார் எனவும் அவர் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் எனவும் அந்த அணியின் பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், ஃபெர்குசன் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஆடுவார். நாக் அவுட் போட்டிகளில் அவர் கண்டிப்பாக ஆடுவார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. தொடைப்பிடிப்பு காரணமாக அவருக்கு 48 மணி நேரம் ஓய்வு தேவை என்று அறிவுறுத்தப்பட்டதால் ஓய்வளிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக முழு உடற்தகுதியை பெற்றுவிடுவார். 

நியூசிலாந்து அணியின் மிகப்பெரிய சக்தி ஃபெர்குசன். அவருக்கு இது முதல் உலக கோப்பை தான். ஆனாலும் அவர் பந்துவீசுவதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அபாரமாக வீசுகிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஃபெர்குசன் தான் பெரிய வித்தியாசமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராகவும் இருப்பார். எதிரணி வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக திகழ்கிறார். இந்தியாவுக்கு எதிராகவும் கண்டிப்பாக மிரட்டுவார் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.