இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 

முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டி நெல்சனில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 180 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில், தொடக்கம் முதலே அடித்து ஆடினார். பவுண்டரிகளாக விளாசிய கப்டில், 17 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 33 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான முன்ரோ இந்த போட்டியிலும் சொதப்பினார். முன்ரோ வெறும் 6 ரன்களிலும் சேஃபெர்ட் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

கடந்த போட்டியில் காட்டடி அடித்த கோலின் டி கிராண்ட் ஹோம், இந்த போட்டியிலும் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார். 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 55 ரன்களை குவித்து அவர் ஆட்டமிழந்தார். ரோஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் தங்கள் பங்கிற்கு கொஞ்ச ரன்களை சேர்த்து கொடுத்தனர். இதையடுத்து 20 ஓவரில் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 180 ரன்களை குவித்தது. 

181 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் பாண்ட்டன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டேவிட் மாலன் அரைசதம் அடித்தார். 34 பந்துகளில் 55 ரன்களை சேர்த்து மாலன் அவுட்டானார். மாலனை தவிர இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் மட்டுமே நன்றாக ஆடினார். ஜேம்ஸ் வின்ஸ் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் இயன் மோர்கன், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 

ஜேம்ஸ் வின்ஸ் களத்தில் இருந்தவரை இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நம்பிக்கையில் இருந்தது. அவர் 49 ரன்களில் டிக்னெரின் பந்தில ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஆட்டம் முழுக்க முழுக்க நியூசிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது. 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று, 2-1 என முன்னிலை வகிக்கிறது. கோலின் டி கிராண்ட் ஹோம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.