இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 176 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கோலின் முன்ரோ இந்த போட்டியிலும் சொதப்பினார். முன்ரோ வெறும் 7 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த டிம் சேஃபெர்ட் 16 ரன்களில் நடையை கட்டினார். அதிரடியாக ஆடிய மார்டின் கப்டில் 28 பந்தில் 41 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். 

நான்காவது பேட்ஸ்மேனாக களத்திற்கு வந்த டி கிராண்ட் ஹோம் 12 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். செம அதிரடியாக ஆடிய டி கிராண்ட் ஹோம் நீண்டநேரம் களத்தில் நிலைக்கவில்லை. அவர் நிலைத்து ஆடியிருந்தால் ஸ்கோர் எகிறியிருக்கும். அதன்பின்னர் டி கிராண்ட் ஹோம் விட்ட வேலையை ஜேம்ஸ் நீஷம் செய்தார். அதிரடியாக ஆடிய பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஜேம்ஸ் நீஷம், 22 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 42 ரன்களை சேர்க்க, அந்த அணி 20 ஓவரில் 176 ரன்கள் அடித்தது. ‘

177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோ முதல் பந்திலேயே கோல்டன் டக்கானார். இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன், கேப்டன் மோர்கன், கிறிஸ் ஜோர்டான் ஆகிய மூவர் மட்டுமே ஓரளவுக்கு ஆடி 30 ரன்களுக்கு மேல் அடித்தனர். இவர்களை தவிர மற்ற யாருமே சரியாக ஆடாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால், இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

நியூசிலாந்து அணி சார்பில் மிட்செல் சாண்ட்னெர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஆட்டநாயகன் விருதையும் வென்றார். டிம் சௌதி, இஷ் சோதி மற்றும் லாக்கி ஃபெர்குசன் ஆகிய மூவரும் தலா  2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.