இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 85 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.  

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டிநடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் அடித்தது.

இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ் மற்றும் டேனியல் லாரன்ஸ் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 81 ரன்களை குவித்தனர். அவர்களுக்கு அடுத்தபடியாக சிறப்பாக ஆடிய மார்க் உட் 41 ரன்களும், டோமினிக் சிப்ளி 35 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் லேதம் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான கான்வே, 3ம் வரிசையில் இறங்கிய வில் யங், 4ம் வரிசையில் இறங்கிய அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஆகிய மூவரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். மூவருமே தலா 80 ரன்களுக்கு மேல் அடித்தனர்.

கான்வே மற்றும் டெய்லர் ஆகிய இருவரும் தலா 80 ரன்களும், வில் யங் 82 ரன்களும் அடித்தனர். டாம் பிளண்டல் 34 ரன்களும், டெயிலெண்டர்களான மாட் ஹென்ரி மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய இருவரும் தலா 12 ரன்களும், அஜாஸ் படேல் 20 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 388 ரன்களை குவித்தது.

முதல் இன்னிங்ஸ் முடிவில் 85 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது இங்கிலாந்து அணி.