ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே கடந்த 3ம் தேதி தொடங்கி சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, லபுஷேனின் அபாரமான இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 454 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதமும் டாம் பிளண்டெலும் சிறப்பாக ஆடினர். இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடங்கி, 29 ஓவர்களை எதிர்கொண்ட லேதமும் பிளண்டெலும் விக்கெட்டை இழந்துவிடாமல் 63 ரன்களை சேர்த்தனர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து அணி 63 ரன்கள் அடித்திருந்தது 

நல்ல தொடக்கத்தை அமைத்த அவர்கள் இருவரும், சிறப்பான பேட்டிங்கை தொடரும் முனைப்பில் மூன்றாம் நாளான இன்று களத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களின் நோக்கத்தை செயல்படுத்த விடாமல் தடுத்தார் நேதன் லயன். மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே டாம் பிளண்டெலை 37 ரன்களில் வெளியேற்றினார் நேதன் லயன்.

இதையடுத்து களத்திற்கு வந்த ஜீத் ராவலுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. நிதானமாக தொடங்கி 58 பந்துகளை எதிர்கொண்டு 31 ரன்களை அடித்திருந்த அவரையும் பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் வீழ்த்தினார் லயன். டாம் லேதமை 49 ரன்களில் வீழ்த்திய கம்மின்ஸ், தன் பங்கிற்கு ரோஸ் டெய்லரையும் வீழ்த்தினார். டெய்லர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து வாட்லிங், காலின் டி கிராண்ட் ஹோம் ஆகியோரும் சரியாக ஆடவில்லை. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் ஃபிலிப்ஸ் மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரை கம்மின்ஸ் 52 ரன்களில் வீழ்த்திவிட்டார். இதையடுத்து சோமர்வில்லி, வாக்னர், மேட் ஹென்ரி ஆகிய மூவரையும் நேதன் லயன் மளமளவென வீழ்த்திவிட்டார். வெறும் 251 ரன்களுக்கே நியூசிலாந்து அணி ஆல் அவுட்டானது. 

ஆஸ்திரேலிய அணியின் சார்பில் நேதன் லயன் 5 விக்கெட்டுகளையும் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்தினார். டி கிராண்ட் ஹோம் ரன் அவுட். நியூசிலாந்து அணி 251 ரன்களுக்கே ஆல் அவுட்டான நிலையில், 203 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது ஆஸ்திரேலிய அணி.