தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலரான நடராஜன், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மிகச்சிறப்பாக பந்துவீசி, தனது துல்லியமான யார்க்கர்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் நெட் பவுலராக அழைத்து செல்லப்பட்டார்.

வருண் சக்கரவர்த்தியின் காயத்தால் டி20 அணியில் இடம்பெற்று அருமையாக பந்துவீசி, கேப்டன் கோலியின் நன்மதிப்பை பெற்ற நிலையில், நவ்தீப் சைனியின் காயத்தால் ஒருநாள் அணியில் இடம்பெற்று, அபாரமாக பந்துவீசி அசத்தியதன் விளைவாக, டெஸ்ட் போட்டிகளுக்கான நெட் பவுலராக ஆஸி.,யிலேயே இருக்கவைக்கப்பட்டார் நடராஜன்.

நெட்டில் நடராஜன் அருமையாக பந்துவீசி வந்த நிலையில், ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் காயமடைந்ததை தொடர்ந்து, கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்ற நடராஜன், அறிமுக இன்னிங்ஸிலேயே முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிலும் அசத்தினார். மேலும் ஒரே சுற்றுப்பயணத்தில் 3 விதமான போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் நடராஜன்.

டி20 தொடரை இந்திய அணி வென்றபோது, அறிமுக வீரர் என்ற முறையில், வெற்றி கோப்பையை நடராஜனிடம் கொடுத்து கௌரவித்தார் கேப்டன் விராட் கோலி. அதேபோலவே, டெஸ்ட் தொடரை வென்றபோதும், பார்டர் கவாஸ்கர் டிராபியை கேப்டன் ரஹானே நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்தார். இப்படியாக ஒரே சுற்றுப்பயணத்தில் 2 கோப்பைகளை தனது கேப்டன்களின் கைகளிலிருந்து பெறும், பெரும் பாக்கியத்தை பெற்ற நடராஜன், டி20 கோப்பையை கேப்டன் தனது கைகளில் கொடுக்கும்போது இருந்த உணர்வை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய நடராஜன், நான் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. விராட் கோலி என்னிடம் கோப்பையை கொடுப்பார் என்பதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. நான் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தேன். விராட் கோலி மாதிரியான ஒரு லெஜண்ட் கோப்பையை என்னிடம் கொடுத்ததும் மகிழ்ச்சியில் நான் அழுதேவிட்டேன். என்னிடம் கோப்பையை கொடுத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். அதை என்னால் விவரிக்க முடியாது என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.