ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தோனி தலைமையிலான சிஎஸ்கேவை விட அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்துவருகிறது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகளுக்கு சில முக்கிய காரணம். அந்த வீரர்களுக்கான மரியாதையை கொடுத்து அந்த அணியும் அவர்களை தக்கவைத்துக்கொள்கிறது. ரோஹித் சர்மா, பொல்லார்டு, மலிங்கா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா ஆகியோர் மும்பை இந்தியன்ஸின் செல்லப்பிள்ளைகள். 

இவர்களில் பும்ராவின் வருகைக்கு பிறகு, அந்த அணியின் ஆதிக்கம் அதிகமானது. பும்ரா வீசும் 4 ஓவர்கள், போட்டியின் முடிவை தீர்மானிக்கக்கூடியதாகவும் மும்பை இந்தியன்ஸ் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது. 

பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர நாயகனாக ஜொலிக்கும் நிலையில், அவர் ஆர்சிபிக்கு செல்லப்போவதாக ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் சந்தேகத்தை எழுப்பியிருந்தார். மும்பை அணியின் ஓனர் முகேஷ் அம்பானி, மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ஒரு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், ரோஹித் சர்மா, ஜெயவர்தனே, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட மும்பை வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால் அதில் பும்ரா கலந்துகொள்ளவில்லை. 

இதைக்கண்ட ரசிகர் ஒருவர், பும்ரா மட்டும் இல்லையே..? அவர் ஆர்சிபிக்கு போகப்போகிறார் என நினைக்கிறேன் என டுவீட் செய்திருந்தார். அதைக்கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ”அமைதியாக இருங்கள்” என ரோஹித் சர்மா சொல்வதுபோல ஒரு "GIF"ஐ பதிவிட்டது. மும்பை இந்தியன்ஸின் ரிப்ளை ரசிகர்களை கவர்ந்துள்ளது.