பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசன் மும்பை இந்தியன்ஸுக்கு படுமோசமானதாக தொடங்கியுள்ளது. 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ஆடிய 5 போட்டிகளிலும் படுமோசமாக தோல்வியடைந்தது.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி மயன்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவானின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 198 ரன்களை குவித்தது. 199 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 186 ரன்கள் அடித்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை அருமையாக விரட்டியது. பேபி ஏபி என்றழைக்கப்படும் டிவால்ட் ப்ரெவிஸ் அதிரடியாக ஆடி 25 பந்தில் 49 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி 20 பந்தில் 36 ரன்கள் அடித்த திலக் வர்மா மற்றும் மும்பை அணியின் ஃபினிஷர் பொல்லார்டு (10) ஆகிய இருவருமே ரன் அவுட்டானார்கள். சூர்யகுமார் யாதவ் ஒரு நபரால் இலக்கை எட்ட முடியவில்லை. அவர்கள் இருவரில் ஒருவர் ரன் அவுட்டாகாமல் இருந்திருந்தால் ஆட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

அந்த 2 ரன் அவுட்டுகளும் தான் மும்பை இந்தியன்ஸின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக மும்பை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.