மகளிர் பிரீமியர் லீக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்று தொடர்ச்சியாக 5வது வெற்றியை பெற்றுள்ளது.  

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயிண்ட்ஸை எதிர்கொண்டு ஆடியது. 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, 2வது வெற்றியை எதிர்நோக்கி இந்த போட்டியில் ஆடியது.

மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்தூர் ஆடுகளம் படுமட்டமா..? கடுப்பான பிசிசிஐ.. ஐசிசியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:

சபினேனி மேகனா, சோஃபியா டன்க்லி, ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், தயாளன் ஹேமலதா, அன்னாபெல் சதர்லேண்ட், சுஷ்மா வெர்மா, கிம் கார்த், டனுஜா கன்வார், ஸ்னே ராணா (கேப்டன்), மன்சி ஜோஷி.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தாரா குஜார், அமெலியா கெர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிதா, சாய்கா இஷாக்.

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஹைலி மேத்யூஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீராங்கனையான யஸ்டிகா பாட்டியாவும் நாட் ஸ்கிவர் பிரண்ட்டும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடி 74 ரன்கள் அடித்தனர். ஸ்கிவர் பிரண்ட் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 44 ரன்கள் அடித்த யஸ்டிகா பாட்டியா ரன் அவுட்டாகி அரைசதத்தை தவறவிட்டார்.

களத்திற்கு வந்ததும் அமைதி காத்து நிதானமாக ஆடிய ஹர்மன்ப்ரீத் கௌர், களத்தில் செட்டில் ஆனபின் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அரைசதம் அடித்தார். 30 பந்தில் 51 ரன்கள் அடித்து ஹர்மன்ப்ரீத் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 162 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

ICC WTC ஃபைனலில் தயவுசெய்து அந்த பையனை ஆடவைக்காதீங்க.. இவரே போதும்..! கவாஸ்கர் அதிரடி

163 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு மளமளவென ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாகவே ஹர்லீன் தியோல் 22 ரன்கள் மட்டுமே அடித்தார். அந்த அணியில் ஒரு வீராங்கனை கூட சரியாக ஆடாததால் 20 ஓவரில் 107 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது.

55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது.