இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி, 2019ல் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு குறித்து எதுவும் பேசாத தோனி, ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதற்காக, உலக கோப்பைக்கு அடுத்த தொடருக்கான அணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். 

அதன்பின்னர் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக எந்த கிரிக்கெட்டிலும் ஆடாமல் இருக்கிறார். உலக கோப்பைக்கு பின்னர் அவர் இந்திய அணியில் இடம்பெறவேயில்லை. அதன் விளைவாக, அவரது பெயர் 2020ம் ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இது, இனிமேல் தோனி இந்திய அணியில் ஆடமாட்டார், தோனியின் கெரியர் ஓவர் என்று ரசிகர்களை நினைக்கவைத்தது.

ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் டி20 உலக கோப்பைக்கான அணியில் மீண்டும் இடம்பிடிக்கலாம் என்ற நம்பிக்கையில் தோனி இருக்கிறார். அந்த நம்பிக்கை ரசிகர்களுக்கும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக உருவாக்கப்பட்டுவரும் ரிஷப் பண்ட், படுமோசமாக சொதப்பியதால், கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்யும் நிலை அணியில் உருவாகியுள்ளது. எனவே தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து உலக கோப்பையில் ஆடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தோனி தனது எதிர்காலம் குறித்து தன்னிடம் பேசியதாக அண்மையில் பதவிக்காலம் முடிவடைந்த, இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பிரசாத், தோனி விஷயத்தில் எந்தவொரு தெளிவற்ற தன்மையையும் நான் பார்க்கவில்லை. தோனி அவரது கெரியர் எதிர்காலம் குறித்து மிகத்தெளிவாக என்னிடமும் அணி நிர்வாகத்திடமும் பேசிவிட்டார். ஆனால் அதை வெளிப்படையாக கூறமுடியாது என்று பிரசாத் தெரிவித்தார்.