இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே.பிரசாத் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர் ககன் கோடா ஆகிய இருவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர்களது இடத்திற்கு முறையே சுனில் ஜோஷியும் ஹர்வீந்தர் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்திய அணியின் தலைமை தேர்வாளர் என்ற தனது பதவி முடிவுக்கு வந்தநிலையில், தனது பதவிக்காலத்தில் நடந்த ஒரு முக்கியமான மாற்றம் குறித்து பேசியுள்ளார் எம்.எஸ்.கே.பிரசாத். 

எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலத்தில் இந்திய அணி அனைத்து ஃபார்மட்டுகளிலும் அபாரமாக ஆடி சிறந்து விளங்கினாலும், மோசமான சில தேர்வுகளால் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார் எம்.எஸ்.கே.பிரசாத். 

இந்நிலையில், தனது பதவிக்காலத்தில் நடந்த ஒரு முக்கியமான மாற்றமான, கேப்டன்சி மாற்றம் குறித்து பிரசாத் பேசியுள்ளார். இந்திய அணிக்கு, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய 3 சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்ததுடன் மிகச்சிறந்த கேப்டன் என்று பெயரெடுத்த தோனி, கேப்டன்சியிலிருந்து விலகியதும் அவரது இடத்தை மற்றொருவர் பூர்த்தி செய்து, அந்த வெற்றி பயணத்தை அப்படியே தொடர வைப்பது என்பது கடினம். ஆனால் அந்த பணியை செவ்வனே செய்தார் கோலி.

இதுகுறித்து பேசிய பிரசாத், தோனியிடமிருந்து கேப்டன் பொறுப்பு அருமையாக கோலிக்கு கை மாற்றப்பட்டது. கேப்டன்சி மாற்றம் நடந்த முறை அருமையானது. அந்த பெருமை, என்னையும் என்னுடன் இருந்த உறுப்பினர்களையுமே சேரும் என்று தனிப்பட்ட முறையில் நான் கருதுகிறேன். 

Also Read - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் 2 வீரர்கள் சர்ப்ரைஸ் தேர்வு..?

தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவது என்று முடிவெடுத்தவுடன், அவரது இடத்தை நிரப்ப தகுதியான நபர் யார் என்று பார்த்தோம். இந்த கேப்டன்சி மாற்றம் பிரச்னையோ சர்ச்சையோ இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றதும், இந்திய அணி அனைத்து விதமான போட்டிகளிலும் நம்பர் 1 இடத்தை பிடித்தது. அது எங்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்தது என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.