இந்த தொடருக்கான இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. டெஸ்ட் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் டி20 அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஹர்திக் பாண்டியா காயத்திற்கு சிகிச்சை எடுத்துவரும் நிலையில், அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டராக விஜய் சங்கர் தான் இதுவரை எடுக்கப்பட்டுவந்தார். ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் எடுக்கப்படவில்லை. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணியில் அறிமுகமான விஜய் சங்கருக்கு உடனடியாக உலக கோப்பையில் ஆடும் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் காயம் காரணமாக பாதியில் உலக கோப்பையிலிருந்து வெளியேறினார் விஜய் சங்கர். 

விஜய் சங்கரின் ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸ் திருப்திகரமானதாக இல்லை. அவர் பேட்டிங் ஓரளவிற்கு ஆடினாலும் பவுலிங்கில் பெரிதாக சோபிப்பதில்லை. இந்நிலையில், வங்கதேச தொடருக்கான டி20 அணியில் மும்பை ஆல்ரவுண்டரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். 

விஜய் சங்கருக்கு பதிலாக ஷிவம் துபே சேர்க்கப்பட்டது குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்த தொடரில் ஆடவில்லை. விஜய் சங்கருக்கு ஏற்கனவே அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுவிட்டது. ஆக்ரோஷமாக ஆடும் அதிரடி பேட்ஸ்மேன் ரோலுக்கு விஜய் சங்கரை விட துபே சரியாக இருப்பார் என நினைக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஏ அணியில் ஆடிய துபே, அபாரமாக பேட்டிங் ஆடினார். எனவே துபே தான் சரியாக இருப்பார் என கருதியதால் அவரை அணியில் எடுத்தோம் என எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார். 

தேர்வுக்குழு தலைவரின் கூற்றின் அடிப்படையில் பார்க்கையில், இப்போதைக்கு அதிரடி பேட்ஸ்மேன் - ஆல்ரவுண்டர் ரோலுக்கு விஜய் சங்கரை தேர்வுக்குழு கருத்தில் கொள்வதாயில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. திடீரென அணியில் வந்து, உடனடியாக உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பையும் பெற்று, உடனடியாக கழட்டியும் விடப்பட்டுள்ளார் விஜய் சங்கர். விஜய் சங்கர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும்.