ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தாமதமானதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது விரக்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இது மிக மோசமான விமான அனுபவம் என்று அவர் கோபத்துடன் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த பிறகு முகமது சிராஜ் கவுகாத்தியில் இருந்து ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது புதன்கிழமை மாலை 7.25 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமானது குறித்து சிராஜ் தனது வேதனையை வெளிப்படுத்தினார். விமான நிறுவனம் தகவல் தொடர்பு கொள்ளாததை அவர் சுட்டிக்காட்டினார்.

முகமது சிராஜ் ஆதங்கம்

இது தொடர்பாக முகமது சிராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கவுகாத்தியில் இருந்து ஹைதராபாத் செல்லும் ஏர் இந்தியா விமானம் எண் IX 2884, 7.25 மணிக்கு புறப்படவிருந்தது. ஆனால், விமான நிறுவனத்திடமிருந்து எந்த தகவலும் இல்லை. மீண்டும் மீண்டும் கேட்ட பிறகும், சரியான காரணம் இல்லாமல் விமானத்தை தாமதப்படுத்தியுள்ளனர்.

4 மணி நேரம் தாமதம்

இது மிகவும் வெறுப்பாக இருக்கிறது. ஒவ்வொரு பயணியும் கேட்கும் அடிப்படை இதுதான். விமானம் 4 மணி நேரம் தாமதமானது, இன்னும் எந்த தகவலும் இல்லாததால் நாங்கள் தவிக்கிறோம். மிக மோசமான விமான அனுபவம். அவர்களால் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாவிட்டால், இந்த விமானத்தில் பயணிக்க யாருக்கும் நான் அறிவுறுத்த மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

சிராஜின் குற்றச்சாட்டுகளுக்கு ஏர் இந்தியா விளக்கம்

முகமது சிராஜின் குற்றச்சாட்டுகளுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக சிராஜின் எக்ஸ் பதிவின் கீழ் பதிலளித்த ஏர் இந்தியா விமானம், ''எதிர்பாராத செயல்பாட்டு காரணங்களால் கவுகாத்தியில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானம் (IX 2884) ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். விமான நிலையத்தில் உள்ள எங்கள் குழு அனைத்து பயணிகளுக்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய தீவிரமாக உதவுகிறது.

இந்த நிலைமை எவ்வளவு கடினமானது

இந்த நிலைமை எவ்வளவு கடினமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், உங்கள் பொறுமை மற்றும் புரிதலுக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றி கூறுகிறோம். எங்கள் குழு உங்களுக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கும் மற்றும் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று உறுதியளிக்கிறோம்'' என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.