விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் தான் என்றாலும், அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடமுடியாது என்று பாக்., முன்னாள் ஜாம்பவான் முகமது யூசுஃப் கருத்து தெரிவித்துள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் ஆடி அதிக சதங்கள்(100 சதங்கள்), அதிக ரன்கள் என பல்வேறு பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்டு, தன்னிகரில்லா ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 43 ஒருநாள் சதங்கள் மற்றும் 27 டெஸ்ட் சதங்கள் என மொத்தம் 70 சதங்களை குவித்துவிட்டார். எனவே அவரது கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடுவதும், இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. 

அந்தவகையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் முகமது யூசுஃப். விராட் கோலி செய்திருக்கும் சாதனைகளுக்கு அவரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். ஆனால் அதேவேளையில், கோலியை சச்சினுடன் ஒப்பிட முடியாது. சச்சின் வேற லெவல் பேட்ஸ்மேன். 100 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். சச்சின் ஆடிய காலக்கட்டம் வேறு; கோலி இப்போது ஆடிவரும் காலக்கட்டம் வேறு. சச்சின் ஆடிய காலத்தில் எந்த மாதிரியான பவுலர்களை எதிர்கொண்டார் என்பதை பார்க்க வேண்டியது அவசியம் என்று முகமது யூசுஃப் தெரிவித்துள்ளார்.