சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் முகமது கைஃப் முக்கிய வீரராக திகழ்ந்தார். அருமையான ஃபீல்டரான அவர், பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடி பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். குறிப்பாக 2002ல் இங்கிலாந்தில் நடந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் அவர் ஆடிய இன்னிங்ஸ் அவரது அடையாளமாக திகழ்கிறது.

இந்திய அணியில் 2000ம் ஆண்டில் அறிமுகமான கைஃப், 2006க்கு பிறகு இந்திய அணியில் எடுக்கப்படவில்லை. 2006 நவம்பரில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் ஓரங்கட்டப்பட்டார். அதன்பின்னர் இந்திய அணியில் மீண்டும் அவர் ஆடவேயில்லை.

முகமது கைஃப் தனது கெரியரின் உச்சத்தில் இருந்த 2004ல் தான் தோனி இந்திய அணியில் அறிமுகமானார். தோனி 2007ல் கேப்டனான பிறகு கூட, மீண்டும் கைஃபுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கவில்லை.

ஊரடங்கு சமயத்தில் இன்ஸ்டாகிராம் லைவ், ஹெலோ லைவ், பேட்டிகள் என பிசியாக இருக்கும் முகமது கைஃப், தோனி தனக்கு ஒரு கம்பேக் சான்ஸ் கொடுக்காதது ஏன் என கிண்டலாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள முகமது கைஃப், 2006ல் நான் கிரேக் சாப்பல், கங்குலி, சச்சின் என அனைவரையும் நொய்டாவில் உள்ள எனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்திருந்தேன். அனைவரும் வந்திருந்தனர். சச்சின், கங்குலி உள்ளிட்ட சீனியர்கள், தோனி, ரெய்னா உள்ளிட்ட ஜூனியர்கள் என அனைவரும் வந்திருந்தனர். 

சீனியர் வீரர்கள் வந்திருந்ததால் எனக்கு ஒரே பதற்றமாக இருந்தது. அவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவர்களையே விழுந்து விழுந்து கவனித்து கொண்டிருந்தேன். தோனி, ரெய்னா ஆகிய ஜூனியர் வீரர்கள் மற்றொரு அறையில் இருந்தார்கள். சீனியர்களை கவனிக்கும் ஆர்வத்தில் அவர்களை கவனிக்க முடியாமல் போனது.

எனவே தோனி, நான் அவரை சரியாக கவனிக்கவில்லை என நினைத்திருக்கலாம். 2007ல் தோனி கேப்டனான பிறகு, எனக்கு கம்பேக் சான்ஸ் கொடுக்காததற்கு அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் என கிண்டலாக கூறி சிரித்தார் கைஃப்.