இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே நடக்கும் பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் இன்று தொடங்குகிறது. 

இரு அணிகளுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சமபலத்துடன் திகழ்கிறது. வார்னர், ஸ்மித், பான்கிராஃப்ட், கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா என ஆஸ்திரேலிய அணி வலுவாக திகழ்ந்தால், இங்கிலாந்து அணி ராய், ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், வோக்ஸ், மொயின் அலி, பிராட், ஆண்டர்சன் என டபுள் வலிமையுடன் திகழ்கிறது. 

இரு அணிகளுமே சமபலத்துடன் இருப்பதால் இந்த தொடர் கடும் போட்டியாக அமையும். முதல் போட்டி இன்று பர்மிங்காமில் நடக்கவுள்ள நிலையில், இந்த போட்டியில் ஸ்டார்க் ஓரங்கட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2001 முதல் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடர்களில் ஆஸ்திரேலிய அணியின் வியூகங்கள் பலனளிக்கவில்லை என்பதால் மாற்று வியூகங்கள் மற்றும் புதிய அணுகுமுறையுடன் இந்த ஆஷஸ் தொடரை அணுக வேண்டும். ஸ்டார்க் சிறந்த பவுலர்; வேகமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கக்கூடியவர். ஆனால் அவருக்கு விக்கெட் விழாத பட்சத்தில் அதிக ரன்களை வாரி வழங்கும் பவுலராகவே மிஞ்சுவார். ஆனால் பீட்டர் சிடில் அப்படியல்ல. அவரது லைன் அண்ட் லெந்த் துல்லியமானது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கருத்து தெரிவித்துள்ளார். 

கடந்த ஆஷஸ் தொடரில் அசத்திய ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய மூவரில் இந்த முறை ஒருவருக்குத்தான் வாய்ப்பு என்று பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்திருந்தார். கம்மின்ஸ் துணை கேப்டன் என்பதால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார். எனவே ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. ஹேசில்வுட் கடந்த ஓராண்டாகவே சரியாக ஆடவில்லை. ஆனால் ஸ்டார்க் உலக கோப்பையிலும் அபாரமாக பந்துவீசி நல்ல ஃபார்மில் உள்ளார். ஆனால் அவரும் ஓரங்கட்டப்படும் நிலை உருவாகியுள்ளது. 

ஸ்டார்க் ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டுவருகின்றன. இது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போட்டி தொடங்க இன்னும் கொஞ்சம் நேரம் தான் உள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பான்கிராஃப்ட், வார்னர், ஸ்மித், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்கஸ் லாபஸ்சாக்னே, மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன், பாட்டின்சன், பீட்டர் சிடில், மைக்கேல் நேசெர்.