உலக கோப்பை தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய முதல் போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

நாட்டிங்காமில் இன்று பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 400 ரன்களுக்கு மேல் குவித்து மிரட்டியது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டரும் வலுவாகவே உள்ளது. 

இரு அணிகளிலுமே பேட்டிங் சிறப்பாக உள்ள அதேவேளையில் பவுலிங் பெரிதாக சொல்லும்படியாக இல்லை. தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து, இங்கிலாந்துக்கு எதிரான அண்மை தொடரில் கூட ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான் அணி உத்வேகம் பெற ஒரு வெற்றி அவசியம். அந்தவகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தான் அணி முனையும். 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு தனது அணியை தேர்வு செய்துள்ளார். ஆடும் லெவனில் அனுபவ வீரர் ஷோயப் மாலிக்கிற்கு மிஸ்பா உல் ஹக் இடமளிக்கவில்லை. 20 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஷோயப் மாலிக்கை அணியில் தேர்வு செய்யவில்லை. அதேநேரத்தில் ஆடும் லெவனில் ஆசிஃப் அலியை தேர்வு செய்துள்ளார் மிஸ்பா. 

தொடக்க வீரர்கள் ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக் நிரந்தர ஜோடி. பாபர் அசாம், முகமது ஹஃபீஸ், கேப்டன் சர்ஃபராஸ் ஆகியோர் கண்டிப்பாக அணியில் இருப்பர். அதனால் இதில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்பின் பவுலராக ஷதாப் கானை தேர்வு செய்துள்ள மிஸ்பா, 4 ஃபாஸ்ட் பவுலர்களை தேர்வு செய்துள்ளார். 

ஆல்ரவுண்டர் ஹசன் அலி தவிர்த்து 3 ஃபாஸ்ட் பவுலர்கள் ஆட வேண்டும் என்று மிஸ்பா தெரிவித்துள்ளார். முகமது அமீர், வஹாப் ரியாஸ் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய மூவரையும் ஆடும் லெவனில் எடுத்துள்ளார் மிஸ்பா. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மிஸ்பா உல் ஹக் தேர்வு செய்த பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன்:

ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ஹஃபீஸ், சர்ஃபராஸ் அகமது(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆசிஃப் அலி, ஷதாப் கான், ஹசன் அலி, முகமது அமீர், வஹாப் ரியாஸ், ஷாஹீன் அஃப்ரிடி.