சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சியில் 2017ல் ஃபைனலில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி, சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அந்த சமயத்தில், சர்ஃபராஸ் கானின் ரேஞ்சும் பாகிஸ்தான் அணியும் ரேஞ்சும் உயர்ந்திருந்தது. 

ஆனால் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில் லீக் சுற்றிலேயே வெளியேறியது பாகிஸ்தான் அணி. உலக கோப்பையின்போது, கேப்டன் சர்ஃபராஸ் அகமது மற்றும் அணி வீரர்களின் ஃபிட்னெஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. உலக கோப்பையில் லீக் சுற்றிலேயே வெளியேறிய பாகிஸ்தான் அணி, அதன்பின்னரும் தோல்விகளை தழுவ, பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்சியின் கீழ் புத்துணர்ச்சியூட்டும் வகையில், தொடர்ச்சியாக பேட்டிங்கிலும் கேப்டன்சியிலும் சொதப்பிவந்த சர்ஃபராஸ் அகமது, கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், அணியிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டார். 

மூன்றுவிதமான அணியின் கேப்டன்சியிலிருந்தும் சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டு, புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி பறிக்கப்பட்டதற்கு அடுத்த இலங்கைக்கு எதிரான தொடரிலேயே அணியிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டார் சர்ஃபராஸ் அகமது. 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒட்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை சீரடைந்ததும் பாகிஸ்தான் அணி அடுத்ததாக ஆடவுள்ள இங்கிலாந்து தொடரில் சர்ஃபராஸ் அகமது கண்டிப்பாக ஆடுவார் என்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மிஸ்பா உல் ஹக், சர்ஃபராஸ் அகமது அதிக அழுத்தத்தில் இருந்ததால் தான் இலங்கை தொடரில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் அவர் தான் கண்டிப்பாக அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் சாய்ஸ். அழுத்தத்தில் இருந்ததால் அவருக்கு பிரேக் தான் வழங்கப்பட்டது. அவர் ஃபிட்னெஸிற்காக கடுமையாக உழைத்துவருகிறார். கண்டிப்பாக மிகவும் ஸ்ட்ராங்காக கம்பேக் கொடுப்பார் என்று மிஸ்பா தெரிவித்துள்ளார்.