ஐபிஎல்லில் 13 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய மிகப்பெரிய வீரர்களை அணியில் பெற்றிருந்தும் ஒரு முறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வென்றதில்லை. அதற்கு அந்த அணியின் கோர் டீம் வலுவாக அமையாததுதான் காரணம்.

கோர் டீம் வலுவாக அமையாததற்கு, வீரர்கள் மீது நம்பிக்கை தொடர் வாய்ப்பளிக்காமல் வீரர்களை எடுப்பதும் கழட்டிவிடுவதுமாகவே இருப்பதால் தான் அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. 

ஐபிஎல் 13வது சீசனில் ஆர்சிபி அணி கோர் டீமை கட்டமைப்பதாக கூறி, ஃபின்ச், கிறிஸ் மோரிஸ் ஆகிய சர்வதேச அளவில் பெரிய வீரர்களை பெரும் தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தது. கிறிஸ் மோரிஸை பத்து கோடி ரூபாய்க்கு எடுத்தது. ஃபின்ச்சை ஐந்தரை கோடிக்கு எடுத்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆடாத நிலையில், அடுத்த சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக அவர்களை கழட்டிவிட்டுள்ளது. 

கோர் டீமை கட்டமைப்பதாக கூறி, ஃபின்ச் மற்றும் மோரிஸை எடுத்த ஆர்சிபி அணி வழக்கம்போலவே பெரும் தொகைக்கு எடுத்த மோரிஸ் மற்றும் ஃபின்ச்சை கழட்டிவிட்டது. சர்வதேச அளவில் மிகப்பெரிய வீரர்களான அவர்களை கழட்டிவிட்டது அனைவருக்குமே பேரதிர்ச்சி தான்.

இந்நிலையில், அவர்களை கழட்டிவிட்டதற்கான காரணத்தை மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மைக் ஹெசன், ரூ.10 கோடிக்கு மோரிஸை எடுத்தோம். அணியின் மிகப்பெரிய வீரராக அவரை எடுத்தோம். ஆனால் காயம் காரணமாக அவரால் சீசன் முழுவதும் ஆடமுடியவில்லை. ஆடிய போட்டிகளிலும் அவரால் அவரது தரத்திற்கு ஆடமுடியவில்லை. எனவே அதில் சில ரிஸ்க்குகள் இருக்கின்றன. ஃபின்ச்சுக்கும் ஒர்க் அவுட் ஆகவில்லை. எங்களிடம் ஆஸி., விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் ஃபிலிப் இருக்கிறார். அவரே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தான்  என்று ஃபின்ச் மற்றும் மோரிஸை கழட்டிவிட்டது குறித்து விளக்கமளித்துள்ளார் மைக் ஹெசன்.