விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக திகழ்கிறார்கள். 

இவர்களில் விராட் கோலி தான் டாப்பில் இருக்கிறார். இவர்கள் நால்வரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்வது கடினம். நம்பரின் அடிப்படையில் கோலி தான் டாப். ஆனால் பேட்டிங் திறமை மற்றும் டெக்னிக்கை பொறுத்தமட்டில் நால்வருமே தலைசிறந்தவர்கள் தான். 

பேட்டிங் சாதனைகள் பெரும்பாலும் விராட் கோலியிடமே உள்ளன. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனைகளை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தின் எதிரொலியாக ஓராண்டு தடை பெற்ற ஸ்மித், ஒன்றரை ஆண்டுக்கு பிறகு, மீண்டும் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டி ஆஷஸ் போட்டிதான்.

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்து ஆஸ்திரேலிய அணியின் அபார வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார் ஸ்மித். இந்த போட்டிக்கு முன் 857 புள்ளிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நான்காம் இடத்தில் இருந்த ஸ்மித், ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 2 சதங்கள் விளாசியதை அடுத்து, 46 புள்ளிகளை பெற்று 903 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பின்னர் கடுமையான காலத்துக்குப் பிறகு மிகவும் வலிமையுடன் மீண்டு வந்துள்ளார் ஸ்மித். தடைக்கு முன் இருந்த ஸ்மித்தை விட, தடைக்கு பின் வந்திருக்கும் ஸ்மித் வேற லெவலில் இருக்கிறார். 

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதல் போட்டியில் அவரது பேட்டிங் அபாரமானது. அனைத்து பேட்ஸ்மேன்களும் விக்கெட்டை இழந்துகொண்டிருக்கும் நிலையில், தனி ஒருவனாக இங்கிலாந்து பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அற்புதமாக ஆடினார். ஸ்மித்தின் கெரியரில் அவருக்கு அமைந்த சிறந்த போட்டி அதுதான் எனுமளவிற்கு அற்புதமாக ஆடினார். 

ஸ்மித்தின் இன்னிங்ஸை பல முன்னாள் வீரர்களும் இந்நாள் வீரர்களும் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில், அவருக்கு கிடைத்த பாராட்டுகளிலேயே சிறந்த பாராட்டாக கண்டிப்பாக இதுதான் இருக்கும். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன், தான் ஆடிய காலத்திலிருந்து இப்போது வரையிலும், சிறந்த டெஸ்ட் வீரர் என்றால் அது ஸ்மித் தான். அவர் ஒரு ஜீனியஸ் என்று மைக்கேல் வாஹன் பாராட்டியுள்ளார்.